கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத் தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன்

காணொளியை டிக் டொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று (12) இரவு முன்னெடுத்தனர்.

நீண்ட நாள் முரண்பாடு காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத் தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதல் நடத்தும் காணொளி பதிவை தாக்குதல் நடத்துவர்களின் முகங்களை மறைத்து டிக் டொக் (Tik tok) செயலில் வெளியிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் 8 பேரை நேற்றிரவு கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும் கூலிக்கு பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் 8 பேரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

  • யாழ். நிருபர் பிரதீபன்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்