முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை முற்றாக விரட்டியடிக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில்

பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக எல்லாக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிப் பகுதியில் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர்கள், கொக்குத் தொடுவாய் பகுதி பொது அமைப்புகள் ஆகியோர் இணைந்து மணற்கேணிப் பகுதிக்குக் கள விஜயம் ஒன்றினை நேற்றைய தினம் (26.03.2023) மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மணலாறு - மணற்கேணிப் பகுதியென்பது, தமிழர்களின் தாயகப் பிரதேசங்களான வடக்கையும், கிழக்கையும் ஊடறுத்துப் பாயும் பறையனாற்றுப் பகுதியில் அமைந்துள்ள, வடக்கின் தமிழர் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றாகும். இந்த பூர்வீக எல்லைக் கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டிற்கு முன்னர், 36 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

அத்தோடு, அப்பகுதியில் 200இற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு வயல் நிலங்கள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அங்குத் தமிழ்மக்களுக்குரிய பெரிய அளவிலான கால்நடைப் பண்ணைகள் காணப்பட்டதுடன், அங்கிருந்த தமிழ் மக்கள் பெரிய அளவில் நெற்பயிற்செய்கை மற்றும், மேட்டுநிலப் பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டதாகவும் கொக்குத் தொடுவாய்ப் பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இந்தப் பகுதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், நெற்களஞ்சியசாலை என்பனவும் அங்குக் காணப்பட்டதாகவும், குறித்த பகுதியில் வாழ்ந்த மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் எனவும் கொக்குத்தொடுவாய்ப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறாகச் சகல வளங்களுடன் சிறப்பாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில், இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு வாழ்ந்த மக்கள் யாழ்ப்பாணத்துடன் தொடர்புடைய மக்களாக இருந்ததாகவும், இராணுவத்தினர் வெளியேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் இதுவரையில் அப்பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

தமிழர்களை விரட்டியடிக்கும் நோக்கில் முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் (Photos) | Buddhistization In Border Villages Of Mullaitivu

தமிழர்களின் வரலாறு
யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர், மணற்கேணிப்பகுதிகளில் காணிகள் உள்ள மக்கள் சிலர் அங்கு மீளக்குடியேற்றுமாறு உரிய அரச அதிகாரிகளைக் கோரியநிலையிலும் அங்கு மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அங்கு தற்போது பௌத்தமயமாக்கல் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள நிலைமைகளை ஆராயும் பொருட்டு கள ஆய்வு ஒன்று இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மணற்கேணிப் பகுதியில் காணப்படும் தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய புராதன சின்னங்கள் இருந்த இடங்கள் இனந் தெரியாதோரால் அகழப்பட்டு அங்கிருந்த புதையல்கள் எடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி