வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க
வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

இந்த தருணத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை இன்று (13) தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது :

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தேர்தலும் முக்கியம் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் காலத்தைப் போலவே இன்றும் மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள். தேர்தலுக்கு சென்றால் எங்களால் வெற்றிபெற முடியும்.

ஆனால் இந்த நேரத்தில் நாம் தேர்தலுக்குச் சென்றால், மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வாழ்க்கைச் சுமை அதிகரிக்கும். முதலில் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். அதுதான் கடந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. மக்கள் கொல்லப்பட்டனர், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது, மக்கள் துன்புறுத்தப்பட்டனர், பொலிஸ் அதிகாரிகள் கழுத்தைப் பிடித்து வீதிக்கு இழுத்துச் சென்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. அன்று சட்டத்தை மீறியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அமைதியையும், சட்டத்தையும் ஏற்படுத்திய பின், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையை நீக்கி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

சுற்றுலா பயணிகள் வரும்போது, அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துகின்றனர். பல்கலைக்கழகங்களில் உள்ள அரசியல் கையாட்களை வீதிக்கு கொண்டு வந்து பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். அதன் மூலம் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை அழிக்க முயல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சேபனைகளுக்கு எதிராக மக்கள் திரளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். மூன்றாவதாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். இன்று ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் வாக்களிக்க சென்று வாக்களித்த மக்களின் கைகளை வெட்டியவர்கள். வாக்குக்காக மக்களைக் கொன்றவர்கள். ஆனால் அரசை கவிழ்க்காமல் எங்கள் பொறுப்பை நிறைவேற்ற தயாராக உள்ளோம்.

கேள்வி - கடந்த காலங்களில் போராளிகளால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் யாரும் தண்டிக்கப்படுவதாகத் தெரியவில்லை. அது நியாயமற்றது. எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பதில் - அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதாரம் வலுப்பெற்று சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் போது வீடுகளுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி - அப்படியானால் நாங்கள் தேர்தலை எதிர்பார்க்க முடியாதா?

பதில் - நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

கேள்வி - வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இல்லையா?

பதில் - தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள் அதைச் செய்யவில்லை. ஆனால் ஒதுக்கப்பட்ட பணம் தேர்தலுக்கு போதுமா என்பதை தேர்தல் ஆணைக்குழு சிந்திக்க வேண்டும். நாங்கள் கட்சியாக தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.

நாடு நிருவாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையால் ஆளப்படுகிறது. இந்த மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் பிரச்சினை என்றால் அதுபற்றி பேச உரிமை உண்டு. நல்லாட்சி அரசாங்கத்தின் போது மாகாண சபைத் தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டமையே எனது வருத்தம். இன்று நீங்கள் பேசும் நபர்கள் அன்று எங்கே இருந்தார்கள்? அப்போது ஏன் பேசவில்லை? மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ளவர்கள் ஏன் பேசவில்லை? இன்று நாடு நெருக்கடியில் இருக்கும்போது இதை மட்டும் ஏன் பேச வேண்டும்? வரியைக் குறைக்கக் கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் ஒரே வரிதான். அதிக வருமானம் உள்ளவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் போது போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது மிகவும் மனவருத்தத்துக்குரிய நிலை.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி