முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.

இருந்த போதிலும் இந்தக் கட்டளையை மீறி கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு ஆதி ஐயனார்ஆலயம் சார்பில் சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்தக் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர் மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்தக் கட்டளை வழங்கப்படும் போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்ச்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை நேற்றைய தினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்குச் சென்றவேளைகூட கட்டுமான வேலைகள் இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்தக் கட்டுமானங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்படுள்ளது.

இவ்வாறான கட்டுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர காவல்துறை பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபடும் இராணுவ, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேந்தவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் மலையடி வாரத்தில் தங்கியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

Kuru_5.jpg

இதேவேளை, குருந்தூர்மலை பகுதியில் மக்களின் வாழ்விட காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றமைக்கு எதிராகவும் குறித்த வாழ்விட காணிகளில் வனவளத் திணைக்களத்தினரும் தமது அடையாளப்படுத்தல்களை செய்து வைத்து தமது மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பது தொடர்பிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக குருந்தூர்மலை பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த மத திணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு விகாரை அமைக்கப்படுகின்ற பணிகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மலை அடிவாரத்தைச் சூழ சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் தங்களுடைய எல்லையாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது,

இதனால் மக்கள் தங்களுடைய குடியிருப்பு காணிகள் மாத்திரமன்றி வயல் நிலங்களையும் இழந்து நிற்கதியாகிய நிலையில் காணப்படுகின்றனர்.

கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் 2009ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 13 வருடங்களாக இன்று வரை தண்ணிமுறிப்பு கிராமத்தில், குறிப்பாக இந்த குருந்தூர் மலையை அண்மித்த பகுதியாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு கிராமத்தினுடைய பூர்விக இடங்களில் குடியேற முடியாமலும் அங்கே இருந்த பாடசாலை மற்றும் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட ஏனையவைகளும் அந்த இடத்திலேயே இயங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் இவர்களுடைய பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் அபகரித்து வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக இந்த விடயங்கள் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற அதிபர் தலைமையிலான கலந்துரையாடலில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னணியில் இன்னும் ஐந்து ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவதற்காக அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.  

கடந்த 1933ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டு குருந்தூர் மலை பகுதியில் தொல்பொருள் இடமாக 78 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மேலும் ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினத்தில் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது குறித்த இடத்தில் ஒன்று கூடிய கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமல் இந்த காணிகளை அளவிட்டு மேலும் திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள் தாங்கள் இந்த ஐந்து ஏக்கர் காணியை அளந்து தொல்லியல் திணைக்களத்திடம் வழங்கி மீதி காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்தும் விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்படுவதன் விளைவாக இது நடைபெறப் போவதில்லை. மீண்டும் நீங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அந்த காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கே முன்வருகின்றீர்கள். எங்களுடைய நிலங்களில் எங்களை மீள் குடியேற்றம் செய்த பின்னர் அவர்களுக்கான காணி அளவீடு பணிகளை மேற்கொள்ளுமாறும் இரண்டு திணைக்களங்களில் இருந்தும் எங்களுடைய இடங்களை விடுவித்து நாங்கள் குடியேறியதன் பின்னர் நீங்கள் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய மீதியிடங்களை அடையாளப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக கோரிய தொல்பொருள் திணைகள அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தராத நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் அனைவரும் மக்களுடைய கருத்துக்களை ஏற்று அளவீட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த இடத்திலிருந்து சென்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி