பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார். தாயாரின் மறைவால் வாடும் பிரதமர் மோடி

உருக்கமாக டிவிட் பதிவிட்டுள்ளார். ட்விட் பதிவில், 100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இளைய மகன் பங்கஜ் மோடி. இவர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

பங்கஜ் மோடியின் வீட்டில் தாயார் ஹீராபென் மோடி வசித்து வந்தார். நேற்று முன் தினம் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக மருத்துவமனையில் ஹீரா பென் மோடி அனுமதிக்கப்பட்டார். ஹீராபன் மோடி உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஹீராபென் மோடி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு உடல் நலனில் என்ன பிரச்சினை என்பது குறித்து எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை. எனினும் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டு இருக்கக் கூடும் என்று தெரிகிறது. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தனது தாயார் மறைவு செய்தி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்து இருக்கிறது. துறவியின் பயணம், தன்னலம் அற்ற கர்மயோகியின் அடையாளம், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை எனது தாயாரிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும், தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்: 100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், குஜராத் முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். தாயார் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் ஷாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி