ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள்

அனைத்தும், மாகாண சபைகளிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொண்டு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ்த் தரப்புகளுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான முன்னெடக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாற கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருக்கிறேன்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடலில், அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், தமிழர்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்துடன் கலந்து கொள்கிறேன்.

“13ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இந்த சந்திப்பில் வலியுறுத்துவேன்.

“மேலும், 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி படிப்படியாக முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) வலியுறுத்தி வருகின்றது.

“இந்த வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்துகிறார்கள். 13 ஆம் திருத்த சட்டத்தை தும்புக்கட்டையால் கூடத் தொட்டுப்பார்க்க மாட்டோம் எனக் கூறிய தமிழ் கட்சிகள் எல்லாம் இன்று 13ஆம் திருத்த சட்டத்தை வலியுறுத்துகின்றன. என்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறேன்” என்றார்.

அத்துடன், “அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். மேலும், வடக்கு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப்பண்ணைகள் செயல்படுத்தப்படும்.

“அட்டைப் பண்ணைகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

“சிலர் அட்டப்பண்ணைகளை வேண்டாம் என பிரச்சாரம் செய்கிறார்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய தேவை இல்லை எனவும் தவறுகள் இருந்தால் அதை சரி செய்வதற்கு தான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி