சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், இலங்கை - இந்திய ஒப்பத்தத்தில்

ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்த சட்டம் மாகாணசபை முறைமை தான் சிறந்த ஆரம்பமாக இருக்குமென அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் அவர் கூறியதாவது,

'சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தில் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டிருந்தது. அதில் பிரதானமாக ஜே.வி.பி இனை தவிர, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். இந்த மாநாட்டில் பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளைத் தான் முன்னிலைப்படுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தது. அதில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பான கருத்துக்கள் தான் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டது.

'இலங்கை, இந்திய ஒப்பத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்த சட்டம் மாகாணசபை முறைமை தான் சிறந்த ஆரம்பமாக இருக்குமென அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இதில் எங்களுடைய முன்னோக்கிய பார்வையில் நியாயமானது, சரியானது என்பதனை வரலாறு நிரூபித்திருக்கிறது.

'தமிழரசுக்கட்சி தரப்புடன் மீண்டும் ஒரு சந்திப்பினை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி நல்ல நோக்கத்தோடு இந்த கூட்டத்திற்கான அழைப்பினை விடுத்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்று விட்டிருந்தது. என்னவெனில் உத்தியோகப்பூர்வமான சந்திப்பு அல்ல, விரைவில் உத்தியோகப்பூர்வமான சந்திப்பு இடம்பெற உள்ளது என தெரியப்படுத்தியிருந்தது.

'இந்த சந்திப்பு எதிர்வருகின்ற 5 ஆம் திகதி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. இதன் மூலம் ஜனாதிபதி தன்னுடைய அக்கறையினை வெளிப்படுத்தி இருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு வந்திருந்தது. யாழ்.மாநகரசபையின் தற்போதைய மேயர் மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்வதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெரும் பங்காற்றியது.

'ஆயினும் பிற்காலத்தில் மணிவண்ணன் தன்னை மேயராக்கிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மாநகர சபை உறுப்பினர்களுடனோ கட்சியுடனோ எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாகவே கடந்த வாரம் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட பாதீடு தோல்வியுற்றது.

'இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டு வாக்கெடுப்பிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் பாதீடு மாநகரசபையில் முன்வைத்தால் எவ்வாறான துலங்கலைக் காட்டுவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மாநகர சபை உறுப்பினர்களோ கட்சி தலைமையோ இன்றுவரை தீர்மானம் எடுக்கவில்லை

'கடலட்டை தொடர்பாக ஊடகங்களில் பலவிதமான கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பில் உண்மையான கோரிக்கைகள் இருந்தால் நிச்சயமாக அது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

'ஸ்ரீமுருகன் கடற்தொழில் சங்கத்தில் இருக்கும் 278 அங்கத்துவத்தினரில் 200 க்கும் மேற்பட்டோர் தங்களிற்கு கடலட்டை பண்ணை வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருக்கிறார்கள். இந்த விடயம் நீதிமன்றம், மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் நிலையங்களில் கூட முறைப்பாடுகள் இருக்கின்றன.

'அதில் 3 கடலட்டை பண்ணைகள் சட்டவிரோதமானது என்று சொல்லி அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைளும் இருக்கின்றன. சிலர் சட்டபூர்வானது என்ற கருத்தும் இருக்கிறது.

'அரசியல் உள்நோக்கத்துடனும், சுயலாப நோக்கங்களோடும் சில பேர் இது சம்மந்தமாக கதைக்கிறார்கள், ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லுவதற்கு எந்த தடையும் இல்லை.

'கடலட்டை பண்ணையுடன் தொடர்புடையதென அண்மைய காலங்களில் நடாத்தப்பட்ட சில போராட்டங்கள் முற்றுமுழுதாக அரசியல்வாதிகளின் தூண்டுதலினாலே இடம்பெற்றதைக் காணமுடிந்தது. குறிப்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்குக் கூட என்ன நோக்கத்திற்காக போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது என்ற அடிப்படை நிலை கூட தெரியாமல் இடம்பெற்றது.

'கடலட்டைப் பண்ணை தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டத்திற்கு முரணான விடயங்கள் காணப்படலாம். அது தொடர்பில் மிக விரைவில் நடுநிலையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

'இவற்றுடன், அத்துமீறி இலங்கைக் கடலினுள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட படகுகளை இலங்கை மீனவர்களுக்கு முறையாகப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மிக விரைவில் இடம்பெறும்.

'கடலட்டை பண்ணை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றது என மக்களால் கூறப்படும் இடங்களிற்கு மிக விரைவில் நேரடி களவிஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளேன்.

'இவற்றுடன் அன்று முதல் இன்று வரை மக்களின் பக்கம் நின்று ஒவ்வொரு விடயத்தையும் அணுகி வரும் நிலையில் அந்நிலையே சரியான பாதை" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி