2021ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை

விட இருபத்தி ஒரு மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை கடந்த 24ஆம் திகதி ஆய்வுக்கு உட்படுத்தும்போதே கணக்காய்வாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையங்களின் செயற்பாடுகளை கணக்காய்வாளர் நாயகம் எடுத்துக்காட்டியுள்ளார்.

விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான தமது வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, 2012 மார்ச் 28 மற்றும் 2016 மார்ச் 24 ஆகிய திகதிகளில், அந்த நிறுவனம், 74,397 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவிக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவிருந்தது.

எனினும், 2020 மார்ச் 4 ஆம் திகதி பெரும் தாமதத்துடன் 82 சதவீத நிதி வழங்கப்பட்டது.

எனினும், விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தினால், 2013 ஏப்ரல் 20 முதல் 2022 ஏப்ரல் 20 வரை, குறைவான நிதி பயன்படுத்தப்பட்டமையால், 359.5 மில்லியன் ரூபா நிதி அர்ப்பணிப்புக் கட்டணமாக செலுத்தப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கடனாளிகளின் நிலுவைத் தொகையான 1.4135 பில்லியன் ரூபா நிதியை மீளப்பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் இயக்கச் செலவு 2.02 பில்லியன் ரூபாவாக இருந்தது.

இந்த தொகையான, அதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தை விட இருபத்தொரு மடங்கு அதிகமாகவும் இருந்தது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டிற்கான வானூர்தி நிலையத்தின் வரிக்குப் பிந்திய நிகர இழப்பு 4.44 பில்லியன் ரூபாவாகவும், 2017 முதல் 2021 வரையிலான வரிக்குப் பிந்திய ஒட்டுமொத்த நிகர இழப்பு 20.59 பில்லியன் ரூபாவாகவும் இருந்தது.

மத்தள விமான நிலையத்தின் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் ஒரு மில்லியனாக இருந்த போதிலும், கடந்த ஐந்து வருடங்களில் மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 91,747 ஆகவும் கடந்த ஐந்து வருடங்களின் மொத்த வானூர்திப் பயணங்கள் 2,396 ஆகவும் இருந்தது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் கடந்த 3 வருடங்களாக தொடர்ச்சியாக நட்டங்களைச் சந்தித்து வருவதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிக்கையளித்த கணக்காய்வாளர் நாயகம், விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களாக எவ்வித வருமானத்தையும் ஈட்டவில்லை எனவும், அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக, அதற்கு 74.64 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி