ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது கோட்டாபய ராஜபக்ஷவிஜனால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத் தொல்பொருள்

மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதிச் செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலைத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு, ஜனாதிபதிச் செயலகம் வழங்கிய பதிலிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதியன்று, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையான வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே அந்த எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

இதையடுத்து, அந்தச் செயலணியில் தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

தொல்பொருள் உள்ள இடங்கள் எனத் தெரிவித்து, சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றமையின் காரணமாக கிழக்கு மாகாணத் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதிச் செயலணியைத் தேவையற்ற ஒன்றாகவே சிறுபான்மை மக்கள் கருதினர்.

இந்நிலையிலேயே, கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதியன்று, மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலைத்துள்ளார் என்று, ஜனாதிபதிச் செயலகம் வழங்கியுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அந்தச் செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே.ஹேனாதீர அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதிச் செயலணியை ரணில் விக்கிரமசிங்க கலைத்துள்ள நிலையில், அதற்கென வழங்கப்பட்ட கடமைகள் அனைத்தும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்ட 2289ஃ43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த கடமைகள் மேற்படி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் செயற்பட்டு வந்தபோதும், ஜனாதிபதிக்கு எவ்வித அறிக்கைகளையும் இந்தச் செயலணி சமர்ப்பிக்கவில்லை.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதிச் செயலணியின் உறுப்பினர்கள் எவருக்கும், சம்பளமோ அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளோ தம்மால் வழங்கப்படவில்லை என்றும், ஜனாதிபதிச் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி