துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக

அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நேற்று (03) துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பொதுமக்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் கருத்துகளை வௌியிடுவதன் காரணமாகவே முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆட்சியிலுள்ள ஷெபாஷ் ஷெரீப்பின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நீண்ட பேரணியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது. 

பேரணியில் உரையாற்றுவதற்காக வாகனமொன்றில் நின்றுகொண்டிருந்த போதே இம்ரான் கான் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு  அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, முன்னாள் பிரதமர் மீதான தாக்குதலை தாமும் வன்மையாக கண்டிப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாகிஸ்தானில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ச்சி கூறியுள்ளார்.

நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேரணில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப்சாய் கூறியுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாதென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி