நாட்டில் நீண்டகால முறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதில்

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பாக அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (வியாழக்கிழமை) எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணைகளில் தேசிய சபை உருவாக்கம் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நீண்ட கால முறையான மாற்றங்களை உருவாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் குழு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு மற்றும் வழிமுறைகளுக்கான குழு ஆகியவை அடங்கும் என ஜனாதிபதி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிதி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழுக்களை நியமிக்க முன்மொழியப்பட்டாலும் அது இன்னும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைசார் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல் போன்ற யோசனைகளும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

17 நாடாளுமன்ற துறைசார் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டிய போதிலும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும் துறைசார் குழுக்களுக்கு நியமிக்கப்படவுள்ள இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் மற்றும் அவர்களின் தகுதிகள் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் அமுல்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முறைமை மாற்றம் மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி