பல ஆண்டுகளாக கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரம் காணப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவினைை முன்னிலைக்கு கொண்டுவருவதத்திற்கான அரசாங்கத்தின் முயற்சியினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது.

இந்த மசோதாவானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினை மேம்படுத்த தேவைப்படும் பல பாராட்டத்தக்க சட்ட ஏற்பாடுகளை அல்லது விதிகளை கொண்டுள்ளது (குறித்த மசோதா www.tisrilanka.org எனும் தளத்தில் மக்களுக்காக பகிரப்பட்டுள்ளது). எவ்வாறாயினும், பொதுமக்களின் கருத்துக்கள் இதுவரை இணைக்கப்படவில்லை என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது. அதேபோல், ஓர் முக்கிய சட்டமாக முன்மொழியப்படும் குறித்த மசோதாவின் முக்கிய விபரங்கள் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களின் தலையீட்டுக்கு மிகக்குறைந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு விரைந்து கொண்டு வரவுள்ளமை தொடர்பில் TISL நிறுவனம் தீவிர கரிசனை கொள்கிறது.

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவானது சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, TISL நிறுவனம் மற்றும் பலர் மிகக் குறுகிய கால பகுதிக்குள் குறித்த மசோதா தொடர்பிலான தமது கருத்துக்களை நீதி அமைச்சிடம் கையளித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த மசோதாவானது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், முக்கிய கொள்கைகள் மற்றும் நடைமுறைத் தேர்வுகள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள் ஏதேனும் பரிசீலிக்கப்படுகின்றதா என்பது தெளிவற்று காணப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் சட்டம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச் சட்டம் போன்ற சட்டங்களின் பதிலீட்டு சட்டமாக இச்சட்டம் விளங்கவுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற ஊழல் சார்ந்த பிரச்சனைகளை தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றதை பாராட்டும் அதேவேளை, தற்போதைய நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான சட்டங்கள் இலங்கையில் போதியளவு காணப்படுவதாக TISL நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது குறைந்தளவிலே காணப்படுகிறது. தொழிநுட்பப் பிழைகள் மற்றும் சர்ச்சைக்குரிய மீளப் பெறுதல்கள் காரணமாக முக்கிய வழக்குகள் இடை நிறுத்தப்பட்டமையானது பாரியளவான ஊழல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சட்ட அமுலாக்க அதிகார சபைகள் வினைத்திறனற்றதாக நிரூபித்துள்ளது. இவை சட்ட அமுலாக்க அதிகார சபைகளின் சுதந்திரம் அல்லது சுயாதீனத் தன்மை மற்றும் நிபுணத்துவம் தொடர்பில் முக்கிய கரிசனைக்கு வழிவகுக்கின்றது.

தற்போது காணப்படுகின்ற ஊழலுக்கு எதிரான சட்டங்களை வினைத்திறனாகவும் சமமாகவும் செயல்படுத்த போராடும் இந்தப் பின்னணியில்தான் புதிய ஊழலுக்கு எதிரான சட்ட அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான எந்தவொரு சுதந்திரமான அமைப்பினதும் சுதந்திரமானது, வரவிருக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் போதிய சுதந்திரத்தினை வழங்கினால் மட்டுமே அதிகார தலையீடுகளிலிருந்து சுயாதீனமாக இயங்க முடியும் என TISL நிறுவனம் விசேடமாக குறிப்பிடுகிறது.

சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதை கட்டாயமாக்குதல், முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை அல்லது சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், தண்டனைகளை அதிகரித்தல், தனியார் துறை சார்ந்த ஊழல்கள் தொடர்பில் திடம்பட செயற்படல் மற்றும் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவானது ஏனைய சட்ட அமுலாக்க அதிகார சபைகளுடன் ஒருங்கிணைந்து செயற்படவும் மற்றும் அவர்களது விசாரணை முன்னேற்றங்கள்/ செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவதத்திற்கும் அவர்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படுவதனை உறுதி செய்தல் என்பன குறித்த மசோதா தொடர்பிலான TISL நிறுவனத்தின் பரிந்துரைகளாகும். மேலும், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCAC) ஓர் பங்காளியாக இலங்கை காணப்படுகின்ற பட்சத்திலும் சர்வதேச சொத்து மீட்பு மற்றும் தேர்தல் பிரசார நிதி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்ட குறித்த மசோதாவில் உள்ளடக்கப்படவில்லை என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகையில், நாம் பயனற்ற விதத்தில் சட்டங்களை இயற்றக் கூடாது. சட்டங்கள் உருவாக்கப்படும் சூழ்நிலையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இலங்கையில் சட்டத்தினால் மட்டும் ஊழல் செயற்பாடுகளை உடனடியாக தீர்க்க முடியாது. மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான ஊழலை ஒழிக்க அரசியல் ஆர்வம், பல்துறை சார்ந்தவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு, அத்தியாவசியமான முறைமை சீர்திருத்தங்கள் மற்றும் கலாச்சார மாற்றம் என்பன அவசியம்” என குறிப்பிட்டார்.

மேற்கூறிய கருத்தின் அடிப்படையில், ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கூடிய தாக்கத்தினை ஏற்படுத்த தற்போதுள்ள சட்டத்தினை பயன்படுத்தி சட்ட அமுலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு TISL நிறுவனம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.

முக்கியமான இந்த தருணத்தில், தொழில்நுட்ப அல்லது நடைமுறை ரீதியான குறைபாடுகளை தவிர்க்க மற்றும் பொதுவுடைமையினை உறுதி செய்ய, முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவானது பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட முன்னர் மசோதா தொடர்பிலான வெளிப்படையான பொது ஆலோசனை செயல்முறையை உறுதி செய்யுமாறு TISL நிறுவனமானது அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி