கோத்தாபய ராஜபக்ஷ செல்லுபடியான இலங்கை பிரஜையல்ல என்பதால் அவரது இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் எழுத்தாளர் காமினி வியன்கொட ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதி மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் தற்போது கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு

, அதனை கோத்தாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகளிடம் வழங்கியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.

இந்த மனு பிரதிவாதிகளுக்கு நொத்தீசு விநியோகிப்பதற்காக நாளை திங்கட்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எழுத்துக் கொள்ளுமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தாபயவின் ஆவணங்கள் “மிஸ்ஸிங்க்”!

குறித்த மனுதாரர்களினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் குற்றப்  புலனாய்வுத் திணைக்களத்தினால்  தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்த போது இணைக்கப்பட்டுள்ளதோடு, அந்த பீ அறிக்கையின் மூலம் வெளிவரும் விடயங்களுக்கு அமைவாக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்குவதற்குரிய கோவைகள் பாதுகாப்பு அமைச்சிடமோ அல்லது குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடமோ இல்லை என்றும், அதே போன்று கோத்தாபயவின் குடியுரிமை தொடர்பான அறிக்கைகள் திருடப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதே போன்று குடியுரிமைச் சட்டத்தின் 19ம் பிரிவுக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷ இரட்டைப் பிரஜாவுரிமைக்காக உரிய விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், எனவே அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ் மோசடியானது அல்லது இரத்துச் செய்யப்பட்டது அல்லது செல்லுபடியற்றதாகையால் அந்தச் சான்றிதழில் சட்டரீதியான செல்லுபடித்தன்மையற்றது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ஷ சட்டரீதியான இலங்கைப் பிரஜை இல்லாவிட்டால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு, தேசிய பாதுகாப்பிற்கு, இறையாண்மைக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மீளத் திருப்பமுடியாத கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி