ஜனாதிபதியால் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமையூடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 03 அடிப்படை உரிமை மனுக்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பில் சில ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் குணதிலக்க தெரிவித்தார்.

தற்போது குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுப்பதற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மனுவினூடாக கோரப்பட்டுள்ளதால், மனு மீதான விசாரணையை மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என அரச சிரேஷ்ட சட்டத்தரணி கூறினார்.

அவசர விடயம் தொடர்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அவற்றை விரைவாக பரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரும், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி