இலங்கைக்கான வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவி தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் வௌியிட்ட கருத்திற்கு சீனா பதிலளித்துள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற  கடனுதவியை வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணி என சமந்தா பவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சீனா, தமது முதலீடுகளினால் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகமான, மேம்பட்ட நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சீன – இலங்கையின் நடைமுறை ஒத்துழைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் விஞ்ஞான ரீதியாகவும் திட்டமிட்ட வகையிலும் முன்னெடுக்கப்படுவதாக சீனாவின் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாஓ லிஜியேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முதலீடுகளில் அரசியல் தலையீடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மூலதன சந்தை மற்றும் பல்வேறு அபிவிருத்தி வங்கிகள் வழங்கிய கடனுதவியை விட சீனாவின் வெளிநாட்டுக் கடன்கள் மிகக் குறைவானது எனவும் சீனாவின் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் குறைந்த வட்டியிலும் நீண்ட கால அடிப்படையிலும் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சாஓ லிஜியேன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத அதிகரிப்பினால்,  இலங்கை போன்ற பல வளர்ச்சியடையும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாஓ லிஜியேன் மேலும் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள  சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அமெரிக்கா அவ்வப்போது விதிக்கும் தடைகள் மூன்றாம் உலக நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி