369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ளது

அதன்படி, மொத்தம் 369 எச்எஸ் குறியீடுகள், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஜூன் 01ஆம் திகதி முதல் பொருட்களை இறக்குமதி செய்யமுடியும் என நிதிமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சுங்க அனுமதியின் போது வரிகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள நிதியமைச்சு,
2022 ஜூன் 07 வரை திறந்த கணக்கு இறக்குமதியை அனுமதிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு,
அனைத்து பங்குதாரர்களும் அத்தியாவசியப் பொருட்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்கு, இறக்குமதியின் நோக்கத்துக்காக வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணியை சேமிக்க முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
  
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 369 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

அதற்கமைய கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு அல்லது விமான வழி சீட்டை சமர்ப்பித்து இறக்குமதி அல்லது ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரால் வழங்ப்படும் அனுமதிப்பத்திரத்தைப் பெறவேண்டும் என வரத்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி