இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, பல அப்பாவிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது.


குறித்த தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், பலர் இன்னமும் அவயவங்களை இழந்த நிலையில் இன்று வரை உள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டானாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயத்தை குறிவைத்து காலை 8:45 மணிக்கு பயங்கரவாத குழு முதலாவது தாக்குதலை நடத்தியது.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்ரிலா கொழும்பு, சியோன் தேவாலயம் ஆகியவற்றில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

30 நிமிடங்களுக்குள் மட்டக்களப்பு மற்றும் சினமன் கிராண்ட், கொழும்பு ஆகிய ஹோட்டல்கள் தாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தெஹிவளையில் உள்ள சுற்றுலா விடுதியில் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் குண்டு வெடித்தது.
இந்த தாக்குதல்களில் பலியானவர்களில் 45 குழந்தைகளும், 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.

பாதுகாப்புப் படையினரால் தேடுதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் பதிவாகின.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் தற்கொலைப் படை தீவிரவாதிகளில் ஒருவருமான சஹ்ரான் ஹாஷிம்தான் இந்தத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்டது பின்னர் தெரியவந்தது.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் பல அடையாளம் தெரியாத நபர்கள் அதன் பின்னணியில் ISIS கொடியுடன் உறுதிமொழி எடுப்பது போன்ற வீடியோவும் பரப்பப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முடித்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

இன்றுவரை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் தெரிவித்தார்.

81 நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் ஒன்றினைந்து தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வேண்டி வீதியில் இறங்கியுள்ளனர்.

இன்றும் நாடளாவிய ரீதியில் தேவாலங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதோடு மக்கள் பாரிய போராட்டங்களையும் முன்னெடுக்க உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிரான அனைவரையும் சட்டத்தின் முன் கைது செய்து தண்டிப்பதாக ஆட்சி பீடம் ஏறிய அரசு நிலை குழைந்து உள்ளது.

எந்த அரசு வந்தாலும்  நீதி கிடைக்கும் வரை மக்கள் போராட்டம் ஓயப்போவதில்லை!

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி