மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இணைந்து கொள்ளத் தயார் என பல சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகா சங்கத்தினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை, அமைச்சரவையை பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என சுயேச்சைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசாங்கம் உடனடியாக பதவி விலகி இடைக்கால அரசாங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், இது ராஜபக்ஷக்களின் நாடு அல்ல என்றும், குடும்ப ஆட்சிக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஆளும் கட்சியை விட நாட்டை நடத்திச் செல்லக்கூடியவர்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தவறான முறையில் செயல்படவிட்டு அரசு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதனால்தான் அனைத்து பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஒளிந்திருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அரசாங்கத்திற்கு ஞானம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் யாப்பா மேலும் தெரிவித்தார்.

இதனினையே, அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கம் அமைக்குமாறு 13 அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.

வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிடிகொட, குமாரசிறி ரத்நாயக்க, கேபிஎஸ் குமாரசிறி, ராஜிக விக்கிரமசிங்க, அகில எல்லாவல, லலித் எல்லாவல, அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, சுதத் மஞ்சுள மற்றும் அரசாங்கத்தின் பதின்மூன்று பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்களும் மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி