1200 x 80 DMirror

 
 


இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை கடும் விரக்தி மற்றும் கோபத்திற்கு உள்ளாக்கியது.


இதன் விளைவாக நேற்றைய தினம் காலைப்பொழுது இலங்கை மக்களுக்கு ஒரு பதட்டம் நிறைந்த காலையாக விடிந்திருந்தது. நாடளாவிய ரீதியல் பிரதான வீதிகள் மறிக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓட்டுனர்கள் உள்ளிட்ட தரப்பினர் வீதிகளை மறித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இன்னல்களுக்கு மத்தியில் தமது அன்றாட பணிகளுக்காக ஓடிய பொதுமக்கள் நாடளாவிய ரீதியல் போக்குவரத்து தடைப்பட்டதால் சிரமங்களை எதிர்கொண்டனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தை எவ்வாறு கலைப்பது என அரசு யோசித்துக்கொண்டிருக்கும் போது, நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததோடு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இவ்வாறு 19ஆம் திகதி ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இது முதல் தடவையல்ல, பெப்ரவரி 16, 2012 இல் சிலாபத்தில் நடைபெற்ற பேரணியின் போது கலவரத்தில் ஈடுபட்ட பொலிஸாரினால், மீனவரான அந்தோனி பக்னானாண்டோ கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இவ்வாறு அதிகாரிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதியை நினைவுபடுத்தும் இந்தத் தாக்குதல் தற்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இதுவரை பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் ரபுக்கனையில் கலவரமாக காரணம் என்ன?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஏப்ரல் 18 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.

எவ்வாறாயினும் ஏப்ரல் 18 ஆம் திகதி காலை முதல் ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகள் உட்பட வாகன சாரதிகள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் எரிபொருள் தீர்ந்தமையினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிய அவர்கள் கொலன்னாவையில் இருந்து எரிபொருள் பவுசர் வருவதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து வரிசையில் நின்றனர்.

ஆனால் இரவில் வரும் என அறிவிக்கப்பட்ட எரிபொருள் பவுசர் நள்ளிரவு வரை வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அந்த எரிபொருள் பவுசர் வரும் போது நள்ளிரவை தாண்டிவிட்டதால், நள்ளிரவை கடந்தாலும் பழைய விலைக்கே எரிபொருள் நிரப்ப வேண்டும் என அன்றையதினம் காலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்தனர்.

எனினும் அவ்வாறு செய்ய மறுத்ததால் குறித்த எரிபொருள் பௌசரை புகையிரத கடவையில் மக்கள் நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்று (ஏப்ரல் 19) காலை குறித்த பகுதியல் அதிகளவான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமாகியது.

அவர்கள் இரயில் பாதையை தண்டவாளங்கள் மற்றும் ஸ்லீப்பர்கள் மூலம் மறித்து, பிரதான பாதையில் இரயில் சேவைகளை சீர்குலைத்தனர்.

அத்தோடு நகரில் கடைகள் அடைக்கப்பட்டதோடு போராட்டக்காரர்கள் முக்கிய வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க நேற்று மாலை கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக போலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 13 பொதுமக்கள் காயமடைந்தனர்.
சம்பவத்தில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களில் 14 பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கலவரக்காரர்கள் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முற்பட்ட போது முச்சக்கர வண்டி மற்றும் எரிபொருள் பௌசருக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

பௌசருக்கு தீப்பிடிப்பதைத் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளும் அவர்களைச் சுற்றி வளைத்ததாகவும், அதிகாரிகளின் உயிர்சேதம் மற்றும் தீயினால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுப்பதற்குத் தகுந்தவாறு குறைந்தபட்ச பலத்தையே பயன்படுத்தியதாகவும் ஐஜிபி தெரிவித்தார்.

தாம் போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், நிலைமை கையை மீறியதால் முழங்கால்களுக்கு கீழ் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டார்களா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் உள்ளிட்ட சபையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அமைதியை நிலைநாட்டவும், வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் இருந்து விலகி இருக்கவும் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 20 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவொன்றை பொலிஸ்மா அதிபர் நியமித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நேற்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதில் பொலிஸார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை காண்பிக்கும் பல காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி