அரசாங்கத்தின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் காரணமாக பிரதிசபாநாயகர் பதவியிலிருந்து விலக போவதாகவும் நாளை மறுதினம்  மாத்திரம் பதவி வகிப்பதாகவும்  பிரதிசபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்த போதிலும் நாட்டு மக்கள் முன்வைக்கும் கோரிக்கை மற்றும் அவர்களின் அபிலாசை குறித்து அரசாங்கம் பொருத்தமான தீர்மானங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பதவிகளை துறந்து பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகின்றனர். பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியும், பிரதி தவிசாளர் பதவியும் அவர்களின் வசமே காணப்படுகிறது.

பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தில் பதவியல்ல போதும் சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கமைய அப்பதவியில் இருந்து விலக முன்னெடுத்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தேன். 

இருப்பினும் ஜனாதிபதி எனது பதவி விலகல் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் விசேட பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வேளை பதவி விலகுவது நெருக்கடி நிலைமையினையும், பாராளுமன்ற செயற்பாடுகளையும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்ற காரணத்தினால் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்தேன்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு சிறந்த முறையில் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என்ற காரணத்தினால் நாளை மறுதினமே பதவி விலக தீர்மானித்துள்ளேன்.

தாம் பதவி விலகியதன் பின்னர் குறித்த பதவிக்கு எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் கூடும் போது நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதிசபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி