நாட்டில் உச்சம் கண்டுள்ள மக்கள் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது ராஜபக்ஷ அரசு  திணறி வரும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள்  இராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜபக்ஷ அரசுக்கு புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர்.

முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிலை துறக்க தீர்மானித்திருந்த நிலையில், அமைச்சரவை அமைச்சர்களின் இந்த தீர்மானம் காரணமாக அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக அலரிமாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் பின்னரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு பிரதமர் பதவி விலக தீர்மானிக்கவில்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தது.

இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 11 அரசாங்கக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிரன் அலஸ் ஆகியோர் நேற்று காலை 8.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தனர்.

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதன் விளைவாக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்புகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஊடாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு மைத்திரி கூட்டணியின் பிரதிநிதிகள் முன்வைத்த யோசனைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் கூட்டாளிகளின் நான்கு பிரதிநிதிகள் கடந்த 02 ஆம் திகதி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இடைக்கால அரசாங்க பிரேரணையை கையளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இது தொடர்பில் பிரதமருடனும் கலந்துரையாடுமாறு நான்கு கட்சி பிரதிநிதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அவ்வாறான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், நிதி அமைச்சருக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் எனவும், அதனை நிறைவேற்ற தேவையான வாக்குகள் தங்களிடம் உள்ளதாகவும் கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு பிரதமர் கூறியிருந்த போதிலும் அவர் அதனை வன்மையாக நிராகரித்துள்ளதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், பிரதமர் ஒருவர் பதவி விலகினால், அமைச்சரவை தானாகவே கலைக்கப்பட்டு, புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். 

இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால், பசில் ராஜபக்சவின் நிதியமைச்சர் பதவி நீக்கப்படும் எனவும், அவரை நீக்க நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மைத்திரி கட்சிகள் முன்வைத்துள்ள இடைக்கால அரசாங்கத்தில் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனையிலேயே மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக இணங்கியுள்ளார்.பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஜனாதிபதிக்கு அறிவித்ததையடுத்து ஜனாதிபதியும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று பிற்பகல் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து மீண்டும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இன்று (04) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவிருந்தார்.

 புதிய இடைக்கால அமைச்சரவையில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களான பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்துள்ளார்.

அதன் பிரகாரம், பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தின் வரைவை தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது ஊடகப் பணிப்பாளர்களில் ஒருவரான மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார்.

எவ்வாறாயினும், மைத்திரி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடு குறித்த செய்திக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே அமைச்சரவை அமைச்சர்கள் மற்றொரு முன்மொழிவைக் கொண்டு வருந்துள்ளனர்.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்ததையடுத்து அவருக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பிரதமர் பதவி விலகாமல் அமைச்சரவை  அமைச்சர் பதவியில் இருந்து விலகுவோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, பிரவித்ரா வன்னியாராச்சி, சனத் நிஷாந்த மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி போன்ற பல தீவிர பசிலிச ஆதரவு அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து பதவி விலக வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை நாளை காலைக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தீர்மானத்தை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதுடன், தனது இராஜினாமா கடிதத்தை தயாரித்த முன்னாள் ஊடகப் பணிப்பாளரிடம் கிழித்து எறியுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எமக்கு தகவல் வழங்கிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர், ஜனாதிபதியை தொடர்ந்தும் சிறுமைப்படுத்தி அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அமைச்சரவை ராஜினாமா!எவ்வாறாயினும், கட்சித் தலைவர்கள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொஹொட்டு கட்சியின் தலைவர்களை நேற்று இரவு அலரிமாளிகைக்கு அழைத்திருந்தார்.

முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு பொருத்தமான அமைச்சரவையை நியமிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாகவும், அதன்படி பிரதமர் தவிர்ந்த ஏனைய அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி