மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது இனவெறி சம்பவமோ, அரசியல் அடிப்படைவாத செயற்பாடோ அல்ல, இத்தகைய கருத்துக்கள் ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியின் ஒரு விளைவாக இந்த சம்பவத்தை விவரிக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வன்முறையை சகித்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

இத்தோடு இந்த மக்கள் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் முழு அறிக்கை:

குடிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து நேற்றிரவு மிரிஹான பங்கிரிவத்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியின் விளைவாக இந்த சம்பவத்தை விவரிக்க முடியும்.

இலங்கையின் பிரஜைகளை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகளும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன. இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் பல்வேறு குழுக்களை குற்றம் சாட்டுகிறது, ஆனால் அவர்கள் இந்த கூற்றுகளை ஆதரிக்க ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இது இனவெறி சம்பவம் அல்ல. இது ஒரு அடிப்படைவாத  சம்பவம் அல்ல. இத்தகைய கருத்துக்கள் ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும். ஜூப்ளி போஸ்டில் நடைபெற்ற போராட்டம் அமைதியான நிலையில் இருந்த போதிலும், பங்கிரிவத்தையில் அந்த நிலை மாறியது.

இதில் நான் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கிறேன். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. வன்முறையை பொறுத்துக் கொள்ளக் கூடாது. சுதந்திரமாகவும் அமைதியாகவும் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. பொதுமக்கள் நடத்தும் இந்த போராட்டங்களில் அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்த உரிமை உண்டு.

காலதாமதமாக இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கும் இப்போது பொறுப்பு உள்ளது. நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும். கட்சி பேதமின்றி தேசிய ஒருமித்த கருத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும் போது இந்தக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும். இந்த நெருக்கடி வன்முறையின்றி அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி