நுகேகொடை, மிரியானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதல் நடத்தியதையடுத்து பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் முயன்ற போது, ​​பொலிஸாருக்கும் பொது மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இவ்வாறு பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதலின் போது பொலிஸ் பஸ் ஒன்றும், பொலிஸ் ஜீப் ஒன்றும் , 2 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன மற்றும் ஒரு தண்ணீர் தாங்கி ட்ரக் சேதமாக்கப்பட்டது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அத்தோடு 3 மடங்காக அதிகரித்துள்ள பொருட்களின் விலையும், ஊதிய அதிகரிப்பின்மையும் மக்களின் வாழ்க்கைச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.

இதனிடையே நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு, விரக்தியில் உள்ள மக்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது.

நேற்று வெளியான 12 மணித்தியால மின்வெட்டு அறிவிப்பின் காரணமாக கடும் கோபத்திற்கு உள்ளான மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள நுகேகொடவுக்கான மிரிஹான நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (31) பிற்பகல் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன,மத,மொழி பேதம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் இலங்கையர்களாக இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டனர்.

தமக்கு மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது உங்களுக்கு மட்டும் எவ்வாறு மின்சாரம் உள்ளது என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அண்மையில் வெளியான மின் வெட்டுப் பட்டியலில் ஜனாதிபதி மற்றும் எப்.பிக்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட 191 பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல் படுத்தப்படுவதில்லை என்ற உண்மை வெளியாகியிருந்தமை அவர்களின் கோபத்தை நியாயப்படுத்தியது.

எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் போராடினர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் குறித்தப்பகுதிக்கு முதல் முறையாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் இல்லம் இருளில் மூழ்கியது.

ஜனாதிபதி மாளிகைக்கு முற்றுகையிடும் போராட்டத்தைத் தடுக்க பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இல்லம் தாக்கப்படுவதைத் தடுக்க, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுமையான சாலைத் தடைகளும், பொலிஸ் பாதுகாப்பும் முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பழைய கொட்டாவ வீதியில் ஜூபிலி சந்தியிலிருந்து 2 கிலோமீற்றர் தூரம் வரை பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.ஜனாதிபதி இல்லத்தின் பாதுகாப்புப்பிரிவின் பஸ் ஒன்றும் இதன் போது தீவைக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இறுதியாக மக்கள் போராட்டத்தை ஒடுக்க, அரசாங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கை அமல்படுத்தியது.

69 இலட்சம் மக்களினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை அதே மக்கள் இன்று ஆட்சியிலிருந்து விலகுமாறு அழைப்பு விடுத்து வீதியில் இறங்கியுள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியாக தமது உரிமைகளுக்குத் தாம் ஏமாற்றப்பட்டதற்கு எதிராகப் போராடுவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை மக்கள் நேற்று உலகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் சம்பவத்தின் போது ஜனாதிபதி வீட்டில் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

மியன்மார் போன்ற இலங்கையிலும் இராணுவ கட்டுப்பாடு அதிகரிக்குமா என்ற அச்சம் பரவலாகக் காணப்பட்டபோதும், இலங்கைக்குப் பலவாறு உதவிகளைச் செய்து, நாட்டின் அரசியல் பாதுகாப்பு என அனைத்திலும் அங்கம் வகிக்கும் அமெரிக்க மற்றும் இந்திய நாடுகள் அதற்கு ஒரு போதும் இடம் அளிக்காது.

அதுவரை இலங்கை மக்கள் தமது ஜனநாயக ரீதியாக போராட்டங்களை முன்னெடுப்பதில் மியன்மாரை விடவும் பாக்கியசாலிகளாக உள்ளனர்.


நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்றும் வருவோம் என கோஷங்களை எழுப்பியிருந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை முதல் குறித்தப்பகுதியில் மீண்டும் ஊரங்கு அமுல் படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எவ்வாறாயினும் மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் அடிப்படைவாத குழுவொன்று இருந்ததாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


வன்முறையான முறையில் நடந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

psd

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி