சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமையவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு , நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் மாத்திரமே இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் , அவரை பதவி விலகுமாறு கோருவதற்கு எந்தவொரு காரணியும் இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிபுணர்களினால் முன்னரே எதிர்வு கூறப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடுமாறு பல தரப்பினராலும் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட போதும் அரசாங்கம் இது தொடர்பில் ஸ்திரமானதொரு நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.

எனினும், நாடு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற மத்திய வங்கி ஆளுனர் விரும்பவில்லை என செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டிய கட்டாயமத்திற்கு நாடு தள்ளப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சங்யோன்ங் ரீ, பிரதி பணிப்பாளர் கலாநிதி ஆன் மேரி கல்ட் வூல்ஃ மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் ஃபெரிதனுசெட்யவான் ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ வியத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்தே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராஜாங்க அமைச்சராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராக சுமார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமையை சீர் செய்யும் நோக்கில் இவர் குறித்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி