மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெருவினால் சகல தேசிய பாடசாலைகளுக்கும் அனுப்பட்டுள்ள விஷேட கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இஸ்லாம் தரம் 6 (சிங்களம்), இஸ்லாம் தரம் 6 (தமிழ்), இஸ்லாம் தரம் 7 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (தமிழ்) மற்றும் இஸ்லாம் தரம் 11 (தமிழ்) ஆகிய பாடநூல்களையே இவ்வாறு மீள பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளமையினால் அப்பாடநூல்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், பாடநூல்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பின் அவற்றை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நூல்களுக்கு பதிலாக புதிய திருத்தப்பட்ட நூல்களை வழங்குவதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இஸ்லாம் பாட புத்தகங்கள் சில தொடர்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தப்படவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதன் நிலையிலேயே, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தற்போது அனைத்து பாடசாலைகளுக்கும் குறிப்பிட்ட சில இஸ்லாம் பாட நூல்களை விநியோகிக்க வேண்டாம் எனவும், விநியோகிக்கப்பட்ட பாட நூல்களை மீள பெறுமாறும் அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி