நீண்டகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார பாதுகாப்பை விரும்புவதாகவும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் உதவியை கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


”பல்வேறு அரசியல் நோக்கங்களைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.”

தமக்கு வாக்களித்த சிங்கள பௌத்தர்களின் பாதுகாப்பை முதன்மையாக கருதுவதாக அவர் தெரிவித்து இரண்டு வாரங்களின் பின்னரே ஜனாதிபதியின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாக கருதப்படுவதாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வுகாணுமாறு சர்வதேச சமூகத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் பல முக்கிய பகுதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு நாடு எடுத்துச் சென்ற தவறான கருத்துகளை நிவர்த்தி செய்ய விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித உரிமை மீறல்களுக்கு தாம் ஆதரவளிக்கவில்லை. எனவும் வலியுறுத்தினார்.

“என்னுடைய ஆட்சிக் காலத்தில், எவ்வகையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.”  

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட 90 வீதமான காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை தாம் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், எஞ்சிய காணிகளையும் எதிர்காலத்தில் விடுவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

அரசின் கணக்கீடுகளுக்கு ஒரு சவால்

கடந்த ஆண்டு, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கொள்கை வகுப்பை ஆதரிக்கும் ஒரு சுயாதீன அமைப்பினால் அரசாங்கப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 90 சதவீத நிலங்களை விடுவிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியிட்ட புள்ளிவிபரங்களை சவாலுக்கு உட்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் கொழும்பில் உள்ள அனைத்து வதிவிட தூதரக அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட அறிக்கை தொடர்பாக, ஓகஸ்ட் 27, 2021 அன்று கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒக்லேன்ட் நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்த குறிப்பாணை இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்தியது.

"பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட அரச காணிகளில் 89.26% விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 92.22% தனியார் காணிகள் 2019 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2021 மார்ச் அறிக்கைக்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,910 ஏக்கர் தனியார் காணியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4,374.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,027 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 1,414 ஏக்கர் காணியும், வவுனியா மாவட்டத்தில் 8,511 ஏக்கர் காணியும், வட மாகாணத்தில் மாத்திரம் 34,226.8 ஏக்கர் காணி இதுவரை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என ஒக்லேன்ட் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுக்கு அமைய, கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களில் 92.22% கையளிக்கப்பட்ட விடயத்தை ஆராய்ந்து பார்த்தால், அந்தத் தொகை, கையளிக்கப்படாத தனியார் நிலங்களில் 7.88%க்குச் சமம் என ஒக்லேன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தரப்பிற்கு மாத்திரம் உரிய விடயமல்ல

முன்னதாக, "காணாமல் போனவர்கள் என்று கூறப்படும் ஏராளமானோர்" கொல்லப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று காணாமல் போனோர் விவகாரம் ஒரு தரப்பினருக்கு மட்டும் உரியதல்ல எனத் தெரிவித்தார்.

"யுத்தத்தில் காணாமல் போனோர் விவகாரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அனைவருக்கும் அதிகபட்ச நீதியை உறுதி செய்ய நாங்கள் பாடுபடுவோம்."

ஜனாதிபதியின் கருத்திற்கு அமைய, அவர் இனவாதத்தை நிராகரிக்கிறார். பெயர் குறிப்பிடப்படாத ஏனைய அரசியல்வாதிகள் இனவாதத்தை மேலும் விதைப்பதாக குற்றம் சாட்டிய அவர், “ஒருவருக்கொருவர் தூண்டிவிடுவதை” உடனடியாக நிறுத்துமாறும் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், இவ்வருட முற்பகுதியில் மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால்  வழங்கப்பட்ட “ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண” விருதை ஜனாதிபதி அங்கீகரித்ததுடன் சிங்கள பௌத்தர்களைப் பாதுகாப்பதே தனது முதன்மையான பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

 நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்கள் குழுவிற்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிப்பதற்கான தனது நடவடிக்கைகளை வெளிப்படுத்திய  ஜனாதிபதி, அத்துடன் 1978 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில்  உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தேவையான "காலத்திற்கான திருத்தங்களை" கொண்டுவருவதற்கான தயார்நிலையையும் வெளிப்படுத்தினார்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நீதித்துறையின் சுதந்திரத்தை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி