இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வுக்காக இந்திய பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் தலைமையில், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதனை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இன்று கையளித்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இது தொடா்பான நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்று கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆவணம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றமையின் காரணமாக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த 7 பக்க ஆவணம் தொடர்பில் கசிந்த சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில், இந்த ஆவணம் தொடர்பில் ஆரம்பத்தில் பேச்சுக்கள் நடந்தபோது, அதில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணியும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் பங்கேற்றன.

எனினும் அவை இந்த ஆவணத்தில் இறுதியில் கையெழுத்திடவில்லை. மாறாக தாம் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி