திருகோணமலை - சீனக்குடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (13) தேசிய உடைமைகள் விற்பதற்கு எதிரான பெட்ரோலியம் துறைமுகம், மின்சாரம் ஒன்றிணைந்த கூட்டணியினரினால் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எங்களுடைய எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்காதே, எண்ணெய் தாங்கிகள், துறைமுகங்கள் மின்சாரம் முதலான தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தீர்க்கும் அரசாங்கத்தைத் துரத்துவோம், அரசாங்கமே தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தின்னாதே என்ற சுலோகங்களை ஏந்தியவாறும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இவ்வாறு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்குத் தனது எதிர்ப்பினை தெரிவித்து விட்டு தற்போது ஆட்சியில் இருக்கும்போது இவ்வாறு நடந்து கொள்வது முறையற்ற செயல் எனவும் இதன்போது கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணியின் தேரர்களும் கலந்து கொண்டதுடன், குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை விற்பனை செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கையொப்பமும் சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட எண்ணெய் குதங்கள் தொடர்பில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு இரகசியமான முறையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது தேசியப் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் தெரிவித்ததுடன் தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் குதங்கள் அமைந்திருக்கின்ற சீனக்குடா ஐ.ஓ.சி நிறுவன வளாகத்தின் CV 2-வது வாயல் முற்றுகையிடப்பட்டது.

எவ்வாறாயினும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பின் கீழ் அமைந்துள்ள எண்ணெய் குதங்களைப் பார்வையிடுவதற்குக் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதிக்கபடாமயினால் அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சற்று முருகல் நிலை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மற்றும் ஐஓசி நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் குதங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன்போது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததாகத் திருகோணமலை எண்ணெய்க் குத வளாகங்களின் 50 வீத பங்குகள் இலங்கை வசம் உள்ளதாகவும் அப்பிரதேசத்தில் இலங்கை தேசியக் கொடியை பறக்கவிடபட்டுள்ளதாகவும் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலமாக அறியக் கிடைத்ததாகத் தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் தெரிவித்தார்.

இருப்பினும் அவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் இந்த எண்ணெய் குதங்கள் அமைந்திருக்கின்ற வளாகங்களில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட வில்லை எனவும் எந்த ஒரு கணிப்பிடும் செய்யாமல் இரவோடு இரவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த எண்ணெய் குதங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தினை ஒப்பந்தம் செய்து நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து குளிர் காய்வது வேதனை அளிக்கிறது என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் 75வது எண்ணெய்க் குதம் என அடையாளம் இடப்பட்ட எண்ணெய் குதத்தினை பார்வையிட்டதோடு நாட்டின் புதையல் இவ்வாறு நாசம் அடைந்திருப்பதினை பார்க்கும் போது கவலை அடைவதாகவும் இத்தனை ஆண்டு காலமாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வசமிருந்த இந்த எண்ணை தாங்கிகளின் பாகங்கள் கொள்ளையிடப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள் உரியமுறையில் பராமரிக்கப்படாமல் இவ்வாறு தேசிய சொத்துக்கள் சீரழிவதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணி, இலங்கை துறைமுக அதிகார சபை, மின்சார சபை ஊழியர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி