விடுதலைப் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் போன்றவை அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பெற்று அனுபவிக்கிறார்கள் போல தெரிகிறது. வேறு ஆட்களுடைய கைகளிலும் இருக்கக் கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தங்கம், பணம் என சொத்துக்களை வைத்திருந்தார்களா? அவை இப்போது யாருடைய கைகளிலே இருக்கின்றது போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித ஈடுபாட்டினையும் காட்டவில்லை.

அரசாங்கம், பல சொத்துக்களை, தங்கத்தை, பணத்தை பறிமுதல் செய்ததாக கூறினார்கள். அவற்றைக் கூட சரியான முறையிலேயே அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவற்றில் நிறைய தங்கம், பணம் போன்றவை சூறையாடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), இது மக்களுடைய தங்கம், புலிகளிடத்தில் இருந்து நாங்கள் பெற்றவை என கொண்டு சென்று சிலவற்றை விநியோகித்தார்.

அப்போதே நான் அவரிடம் கேட்டிருந்தேன், இத்தனை வருடம் இந்த தங்கத்தை யார் வைத்திருந்தார்கள் என்று. ஏன் அப்பொழுது கொடுக்காமல் இப்பொழுது கொடுக்கின்றீர்கள், இவை மட்டும் தான் நீங்கள் கைப்பற்றினீர்களா? மிகுதி தங்கம் எங்கே என மஹிந்தவிடத்தில் பகிரங்கமாக நான் கேட்டிருந்தேன்.

ஆகவே, அரசாங்கமிடத்திலும் இருக்கின்றது புலிகளிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் போன்றவைகள். அராசாங்கம் என்று சொன்னால் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பெற்று அனுபவிக்கின்றார்கள் போலத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியொரு நடவடிக்கை எடுக்கும்படி எங்களுடைய மக்கள் எங்களிடத்தில் கேட்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி