இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Bob Blackman)பிரித்தானிய வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா 'மெக்னிற்ஸ்கி' முறையிலான தடையை விதிக்கவேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

அந்தவகையில் ஏற்கனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கெல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய மூவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நான்காவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மானும் (Bob Blackman) சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைக்கோரிக்கையை முன்வைத்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொளியில் அவர் கூறுகையில்,

பிரித்தானியாவின் சர்வதேச தடை வழிகாட்டல்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த 'யுத்த சூனிய வலயங்களில்' ஷெல் தாக்குதல்களை நடாத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இறுதிக்கட்டப்போரின்போது பல நூற்றுக்கணக்கானோர் படையினரிடம் சரணடைந்தபோது அந்த இடத்தில் சவேந்திர சில்வாவும் இருந்ததை உறுதிப்படுத்திய கண்கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது.

அவர்களில் பலர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பலவருடங்களாக அவர்களின் புகைப்படங்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடிவருகின்றார்கள்.

இருப்பினும் அவர்களுக்கான பதில் இதுவரை கிட்டவில்லை. போரின்போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோதமான படுகொலைகள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத்தடை விதித்தது.

அவ்வாறானதொரு பின்னணியில் நாம் அவருக்கெதிராகத் தடைவிதிக்கவேண்டிய தருணம் இதுவாகும். எனவே சவேந்திர சில்வா பிரித்தானியாவிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சவேந்திர சில்வா கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் பிளக்மான் (Bob Blackman) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி