யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும், தமிழும் தெரியாது.வடக்கு ஆளுநருக்குத் தமிழ் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பனை அபிவிருத்தி சபை என்பது இப்போது கொழும்பை நோக்கித் தள்ளப்படுகின்றது. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் அவர் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், பனை அபிவிருத்தி சபை தமிழர்களின் பாரம்பரிய தொழிலை அடிப்படையாகக்கொண்டது. எனவே, தயவு செய்து அதனைத் தமிழர்களிடம் விடுங்கள்.

ஒரு கித்துள் திணைக்களத்துக்கோ அல்லது தென்னை அபிவிருத்தி திணைக்களத்துக்கோ தமிழ்த் தலைவரை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.பனை அபிவிருத்தி சபை கம்பணக்காளர், உத்தியோகஸ்தர்களில் கூட அதிகளவான சிங்களவர்கள் இணைக்கப்படுகின்றனர்.

பனை அபிவிருத்தி சபையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது வடக்கு, கிழக்குக்கு உரியது. அதில் உள்ள தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அறிகின்றோம்.

பல பேரின் மாற்றங்களில் தமிழர் நீக்கப்பட்டு சிங்களவர் நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியாத ஒரு சிங்கள மொழி பேசுபவர். நாங்கள் மொழி ரீதியாக அவருடன் பேச முடியாது.

வடக்கு மாகாண ஆளுநரால் கூட தமிழ் பேச முடியாமல் உள்ளது. அவ்வாறான நிலைமைக்குள் தான் நாம் தொடர்ந்தும் தள்ளப்படுகின்றோம். ஒரு கல்வி அமைச்சை எடுத்தீர்களேயானால் அங்குள்ள மேலதிக செயலாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

பல அரச திணைக்களங்களில் இதே நிலைதான். தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. இன விகிதாசாரம் கூட பேணப்படாது நிலைமை மோசமாக இருக்கின்றது. தயவு செய்து இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துங்கள்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்