காவல்துறை மா அதிபருக்குத் தெரிந்திருந்த நிலையிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காவற்துறை காவலில் உயிரிழந்த லுனுவிலகே லசந்தவின் மரணம் சட்டவிரோதமான படுகொலை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு வழங்கிய பயிற்சியை, இனி வழங்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து காவல்துறை அறிவித்து இரண்டு நாட்களுக்குள், லுனுவிலகே லசந்த அல்லது டிங்கரிங் லசந்த இன்று காலை காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை முயற்சி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்திருந்த நிலையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உடனடியாக இது குறித்து காவல்துறைமா  அதிபருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்தார்."

மேலும், இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் ஆணையாளர், ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இதுத் தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஏனென்றால் அவர்  மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் (CHA) தலைவராக செயற்படுகின்றார்.

இன்றைய தினம் களுத்துறை, தியகம பகுதியில், சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை தேடிச் சென்றபோது சந்தேகநபர் குறித்த கைத்துப்பாக்கியால் காவல்துறை அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், காவல்துறையின் பதில் தாக்குதலில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவற்துறை காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை குறித்து விளக்கமளிக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் அமரசூரியவின் கையொப்பத்துடன் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் நிலைமைக் காரணமாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சியைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாக, ஸ்காட்லாந்தின் காவல்துறைத் தலைவர் இயன் லிவிங்ஸ்டன் நவம்பர் 24ஆம் திகதி உயர் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அதிகரித்துள்ள கைதுகள், தடுப்புக்காவல் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறையினால் வழங்கப்படும் பயிற்சியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி