சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொலிஸார் மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது என்றார்.

இந்தச் சூழலில் பின்னணியிலேயே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார் எனக் கூறி, தங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன எனவும்,அவர் தெரிவித்தார்.

"மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள், தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றன. தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரிடம் கேட்டிருக்கின்றோம்.

"அந்த அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

"குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.

"தடை செய்யப்பட்ட பொருள்களை வைக்காமல், மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி