1200 x 80 DMirror

 
 

தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்தல் என்ற பொதுப்புள்ளியில் இதய சுத்தியுடன் அனைத்து தரப்பினரும் ஐக்கியப்பட வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தினைக் கொண்டிருந்த தோழர் நாபாவின் ஜனன தினத்தில் தமிழ்த் தேசியத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இலக்கை அடைவதற்காக ஐக்கியப்படுவோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சிவசக்தி (ShivaShakti) ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இன் ஆரம்பகர்த்தாவும், விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான தோழர் பத்மநாபாவின் 70ஆவது ஜனன தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழின விடுதலைக்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் பத்மநாபா சமவுடைமையில் நின்று சிந்தித்த சிறந்தவொரு தீர்க்க தரிசியாவார்.

பத்மநாபாவும் எமது கட்சியும் ஆயுத விடுதலையை முழுமையாக நம்பியிருந்த காலத்திலேயே, தமிழனத்தின் இருப்பு, எதிர்காலம் உள்ளிட்டவற்றிலும் தீவிரமான கரிசனையைக் கொண்டிருந்தது.

அது மட்டுமின்றி வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒரே பொது இலக்கினைக் கொண்டிருக்கின்றன என்ற புரிதலைக் கொண்டிருந்த அவர் ஆயுத இயக்கங்களை ஒருங்கிணைத்து ஈழத்தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக உழைத்தார்.

ஆயுத ரீதியில் போராடினாலும், இலக்கு ஒன்றாக இருக்கையில் இனத்திற்கான ஐக்கியத்துடன், ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதில் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதற்கு செயல் வடிவமும் கொடுத்திருந்தார்.

பின்னர், இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தினை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருந்தார்.

அப்போது, அன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது.

அவற்றை தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது விட்டாலும் அவற்றை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கின்றது என்பதில் உறுதியாக இருந்தார். அதனை உரக்க கூறினார்.

தமிழர் தாயகத்தினை மையப்படுத்தி இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையொன்றை வலுவான கட்டமைப்பாக செயற்படுத்த வேண்டும் என்பதிலும் அதீத ஆர்வம் காட்டினார்.

துரதிஷ்டவசமாக தமிழ் தலைவர்கள் அன்றைய காலகட்டத்தில் தோழர் நபாவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

அவரது கருத்துக்களை நிராகரித்ததுடன் நிற்காது மாகாண சபைக் கட்டமைப்பை மலினப்படுத்துவதற்கான அனைத்து விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்கள்.

தற்போது 34ஆண்டுகள் கழிந்து விட்டன. கடந்தகாலத்தினை ஒருதடவை மீட்டிப்பார்க்கையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்திப் பெறமுடியாததொரு தள்ளாட்டமான நிலைமையில் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி, கடந்த காலத்தில் நடந்தேறிய அத்தனை அழிவுகளுக்கும் நீதி, நியாயம், பொறுப்புக்கூறல் என்பது கூட சமுத்திரத்தில் கரைந்துவிட்ட உப்பையொத்த நிலைமையில் தான் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

அதனால், அபிலாஷைகளும் இல்லை பொறுப்புக்கூறலும் இல்லை என்ற அநாதரவான நிலையில் தான் தமிழினமே இருகின்றது.

இந்தக் காலத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை மீளவும் முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சியை கையிலெடுத்துள்ளன.

இருப்பினும், அதற்கும், சில தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டைகளை திரைமறைவில் போடும் நிலைமையே நீடிக்கின்றது.

இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சாத்தியமற்றதாகியுள்ளது.

தமிழர்களின் சார்பில் இந்திய இலங்கை ஒப்பந்த்தில் கையொப்பமிட்ட இந்தியா கூட அதனை வலியுறுத்துவதற்கான தனது தார்மீக கடமையை நிறைவேற்ற முடியாதவொரு இராஜதந்திர மூலோபயச் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், ஆகக்குறைந்தது, தோழர் நாபா தனது இளம் வயதில் கூறிய தீர்க்க தரிசன வார்த்தைகளை மீள நினைவுபடுத்தி தமிழின விடுதலைக்காக பொதுப்புள்ளியில் அனைத்து தரப்பினரும் ஐக்கியப்படுவதே பொருத்தமானது.

அவருடைய ஜனன தினமான இன்று, அந்த ஒப்பற்ற சிந்தனையாளனின் நிலைப்பாடுகளை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தடவை மீட்டி தீர்மானம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது என தெரிவித்துள்ளார். 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி