"பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

“பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற்றும் வெலிக்கந்த போன்ற கிராமங்களில் இருந்து உயிரிழப்புகள், சொத்து இழப்புகளுக்கு மத்தியில் வடமுனை ஊத்துச்சேனையில் முன்னர் குடியேறிய சிறுபான்மையின மக்களை நோக்கி மேலுமொரு பெரும்பான்மையினக் குடியேற்றம் துரத்தி வருகின்றது.

“பிக்குகள், தொல்லியலாளர்கள், ஆளுநர் தரப்பினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அடிக்கடி அங்கு பிரசன்னமாகி வருகின்றனர்.

“மயிலத்தமடு, மாதவணை, காரமுனை, நெளுக்கல் மலை என்று மட்டக்களப்பு மண்ணை ஆக்கிமிப்பதற்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்தும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன.

“எத்தனையோ வீதிகள் உடைந்து, சிதைந்து கிடக்கின்ற நிலையில், காட்டின் ஊடாக நெளுக்கல் மலைக்கான புதிய வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்படவுள்ளது.

“வியத்மக அமைப்பு சார்ந்தவர்கள் சிங்கள மக்களை மாத்திரம் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலிலிலும் பொதுஜனப் பெரமுனக் கட்சியை வெல்லச்செய்து விடலாம் என்ற மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.

“தொல்லியலாளர்களும், வியத்மக அமைப்பினரும் தமிழ் பேசும் மக்களைத் தொல்லைப்படுத்துவதென்றே சபதம் எடுத்து விட்டார்கள்.

“இப்படியான நிலையில், பொதுஜனப் பெரமுனக் கட்சியிடம் உள்நாட்டுப் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான பொறிமுறைகள் இருக்கின்றனவே ஒழிய, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தப் பொறிமுறையும் இல்லை” என்றார்.      

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி