பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் இலங்கையில் வாழ்வது பாதுகாப்பற்றது எனவும், சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடவுச்சீட்டைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த 8ஆம் திகதி கல்பிட்டி கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 19 பேரும் கல்பிட்டி நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் தொடர்புடைய சாரதி ஒருவரையும் அவரது நண்பரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஜுன் மாதம், கனடாவுக்கு கடற்பயணம் மேற்கொள்ளும் நோக்குடன், கர்நாடகா மாநிலம் மங்களூரில் தங்கியிருந்த நிலையில் இவ்வாறான  குழு ஒன்றை இந்திய பொலிஸார் கைது செய்திருந்தனர்.

தமிழக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 38 இலங்கையர்களும் அவர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய ஆறு இந்தியர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களை கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக கடத்தல்காரர்கள் ஒரு மில்லியன் இலங்கை ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட 30 இளைஞர்கள் சிலாபம் இரணவில சமிந்துகம பிரதேசத்தில் தங்கியிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

குழு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறுதல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சுவரில் வர்ணம் பூசிக் கொண்டிருந்த இளைஞர்கள் கடவுச்சீட்டு வரிசையில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும் என அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாண்டு நிறைவு விழாவில் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி