1200 x 80 DMirror

 
 

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ள அழகிய வனப்பான இலங்கை நாடு இப்போது, கடனுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளது. இலங்கை கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

சீனாவிடமிருந்து கடன்பெற்றது போதாதென்று, தற்போது இந்தியாவிடமும் கடன் கேட்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசாங்கம்.

கடும்  பொருளாதார நெருக்கடி

கடந்த 2019-ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் 20 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

அதோடு இந்த ஆண்டில் மட்டும் 8 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இலஙகியின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்க, அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மட்டும் 1 கிலோ சர்க்கரையின் விலை 240 ரூபாயாகவும், 1 கிலோ பருப்பு 250 ரூபாயாகவும், மஞ்சள் மட்டுமே 1 கிலோ சுமார் 7,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் வேறு வழியின்றி கூடுதல் விலைகொடுத்து வாங்கினாலும், அரசாங்கம் `உணவுப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது, இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே உணவுப்பொருள்கள் கையிருப்பில் உள்ளன' எனக் கூறி மக்களை அதிரவைத்தது.

மேலும், உணவுப்பொருள்களைப் பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, `பொருளாதார அவசரநிலைப் பிரகடனத்தை' அமல்படுத்தினார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம், 17-ம் திகதி சீன அரசாங்கம் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும், சுமார் 6,150 கோடி ரூபாய் கடனை இலங்கை அரசுக்கு அளித்திருப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் அடைக்க முடியாத கடனை, அதிக வட்டிக்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்திருப்பதில் அக்கறையில்லை, அது பொருளாதார, பூலோக உள்நோக்கம் கொண்டது என இலங்கையின் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், அடிமேல் அடி விழுவதுபோல இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையும் தாறுமாறாக எகிறியிருக்கிறது. இதனால், இலங்கையின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 41 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் இலங்கை அரசுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபணம் (Ceylon Petroleum Corporation), நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான இலங்கை வங்கி (Bank of Ceylon), மக்கள் வங்கி (People's Bank) ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டி நிற்கிறது.

மேலும், `பொருளாதார அடிப்படையில் இலங்கையின் எரிசக்தி கையிருப்பு, வரும் ஜனவரி மாதம் வரையில் மட்டுமே இருக்கும்' என எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்போது இலங்கை அரசாங்கம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவிடம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3,750 கோடி) கடனாகக் கேட்டிருக்கிறது. இதற்காக, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்திருக்கிறார்.

 இந்த நிலைமைக்கு என்ன காரணம்?

இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் கொரோனா என்றே அரசுத்தரப்பிலும் பொதுவாகவும் கூறப்படுகிறது. அது உண்மை என்றாலும்கூட அது மட்டுமே காரணம் அல்ல என்பதுதான் உணமை.

கொரோனா தாக்கத்தால் இலங்கைப் பொருளாதாரத்தின் முதன்மைப் பங்கு சக்தியும், அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் முக்கியத்துறையுமான சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கிப்போனது. விமான, கப்பல் போக்குவரத்தும் பெருமளவு குறைந்தது.

எல்லா நாடுகளையும்போல மக்களின் இயல்பு வாழ்க்கை இலங்கையிலும் பாதிப்படைந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் அதிகம் சரிவடைந்தது என்றாலும், கொரோனா தாக்கத்துக்கு முன்பே இலங்கை அரசு கடன் நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அதற்கு முதன்மைக் காரணம் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதுதான். கடந்த 2009-ம் ஆண்டு மகிந்த ராஜகக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அம்பாந்தோட்டை துறைமுகம் எழுப்பும் திட்டத்துக்காக 85 சதவிகித கடனை சீனா, இலங்கை அரசுக்கு அளித்தது.

அதாவது, 2010-ம் ஆண்டு 306 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 6.3 சதவிகித வட்டிக்கும், 2011-ம் ஆண்டு 900 மில்லியன் டொலரை 2 சதவிகித வட்டிக்கும் வாங்கியது இலங்கை அரசாங்கம். விளைவு, 2017-ம் ஆண்டுவாக்கில் இலங்கையின் மொத்த பொருளாதாரத்தில் 50 சதவிகிதம் கடனாக மாறியது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கால குத்தகைக்கு சீனாவிடம் தாரைவார்த்தது மகிந்த ராஜபக்க்ஷ இலங்கை அரசாங்கம். அதேபோல், 2014-ம் ஆண்டு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கான திட்டத்தை அதிபர் ராஜபக்‌ஷே சீன அரசுடன் ஏற்படுத்திக்கொண்டார்.

இது இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகக் கருதப்பட்டது. எனினும் அடுத்தடுத்த ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் 2020-ல் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சி ஏற்பட்டது.

அதேவேளையில் தொடர்ந்து சரிந்துவந்த இலங்கைப் பொருளாதாரம், 2020-ம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடனாக மாறியது. அதன் விளைவு, அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்போலவே கொழும்புத் துறைமுக நகரமும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் கைமாறியது.

இப்படி சீனாவிடம் வாங்கிய அடைக்க முடியாத கடன் ஒருபுறமிக்க, மற்றொருபுறம் இலங்கை அரசின் நிர்வாகத் தோல்வியும் காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, அரசியல் லாபத்துக்காக, பல்வேறு துறையினருக்கும் மானியங்களை வாரிவழங்கியது, இறக்குமதியை கணிசமாகக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் அரசாங்க கஜானாவை காலிசெய்யவைத்தது.

முக்கியமாக, செயற்கை உரங்களுக்குத் தடைவிதித்து, முன் அனுபவம், சரியான திட்டமிடல் இல்லாமல் திடீரென இயற்கை விவசாயத்துக்கு மாற வழிசெய்யும் இயற்கை விவசாயக் கொள்கைக்கு உத்தரவிட்டதால், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது.

இது தவிர, வெளிநாட்டு வங்கி, நிறுவனங்களிலிருந்து இலங்கை அரசு வாங்கிய கடனும் அடங்கியிருக்கிறது. இது போன்ற காரணங்களால், மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இலங்கை அரசாங்கம், கடனைக் கட்டுப்படுத்துவதற்கு வழியில்லாமல், இன்னும் இன்னும் அதிகமாக பிறநாடுகளிடம்  கடனுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி