1200 x 80 DMirror

 
 

சரிந்து வரும் உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பராமரிப்பது அவசியம் என அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா என ஆராய ஐரோப்பிய குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கடந்த 13ஆம் திகதி கொழும்பில் இராஜதந்திரிகளை சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பயங்கரவாதச் சட்டம் பற்றி விவாதித்ததோடு, இலங்கையில் 2017 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தை கொண்டுவருவதில் முக்கிய வாக்குறுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அமைந்திருந்ததாக நினைவு கூர்ந்தது.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தலைவர்களைத் தவிர, பிரதிநிதிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றி விவாதித்ததோடு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்திருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக மைத்திரி - ரணில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டம், மனித உரிமை மீறல்களுக்கான சட்டப் பாதுகாப்பு என சர்வதேச மனித உரிமை அரங்கில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

"ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்வதானது எமது ஆடைத்துறைக்கு மாத்திரமன்றி, இருதரப்பு வர்த்தகத்தின் பிற துறைகளுக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. பொருளாதாரத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகள் தொடர்வது மிகவும் முக்கியமானதாகும். நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதில் இலங்கையின் முயற்சிகளுக்கு மட்டுமன்றி எமது நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதும் எமது சகல சர்வதேச பங்காளர்களின் ஒத்துழைப்பு தேவை.” என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

01 2 600x334

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ஜிஎல் பீரிஸ் இராஜதந்திரிகளை கொழும்பில் சந்தித்தார்.

கூட்டு ஆணைக்குழுவின் பின்னணியில், ஜி.எஸ்.பி பிளஸ் நடைமுறைப்படுத்தலை மீளாய்வு செய்யவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய விஜயம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், கலந்துரையாடல்கள் மிகவும் மரியாதையான முறையில் இடம்பெற்றதையும் நிலுவையிலுள்ள பிரச்சினைகளை அதிகாரிகள் குறித்துக்கொண்டதையுமிட்டு அமைச்சர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தனது முக்கிய வர்த்தக நன்மையைப் பேணுவதற்காக நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொண்டது.

சர்வதேச வாக்குறுதிகளை திறம்பட செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கையின் நன்மை அமைந்துள்ளது. நாங்கள் 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் முக்கியமான பிரச்சினைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், அதை தொடர்ந்து செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கை அரசாங்கத்துடன் மேற்பார்வை மற்றும் தொடர்பு குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு தொடர்ந்து அறிவிக்கப்படும்.” என  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சாய்பி தெரிவித்துள்ளார்.

பாராபட்சமின்றி இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, அடிப்படை சுதந்திரங்களை செயற்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான சட்டமூலம் தயாரிப்பு  ஆகியன தொடர்பில் கவனம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன தொடர்பிலும் அவதானம் செலுத்தியதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களில் மாற்றப்படாத 60 சட்டங்கள் திருத்தப்படும் என  சிறைத்துறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி