மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மன்னராட்சி நடைமுறையில் இருக்கும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான கத்தாரும் ஒன்று. அரசை வழிநடத்துவதில் அந்த நாட்டின் மன்னருக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு கடந்த 1972-ம் ஆண்டு சட்டமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஷூரா என்று அழைக்கப்படும் நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த இந்த சபையின் 45 உறுப்பினர்களை ஆட்சி பொறுப்பில் இருக்கும் மன்னரே நேரடியாக நியமனம் செய்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 2003-ம் ஆண்டு கத்தாரின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டபோது ஷூரா சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2004-ம் ஆண்டு ஷூரா சபைக்கான முதல் பொது தேர்தல் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

ஷூரா சபையின் 30 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மீதமுள்ள 15 உறுப்பினர்களை மன்னர் நியமிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் ஷூரா சபைக்கான தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, சபையின் 45 உறுப்பினர்களையும் மன்னரே நியமித்து வந்தார்.

இந்தநிலையில் கத்தாரின் மன்னராக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷேக் தமிம் ஜனநாயக தன்மை, தொழிலாளர் உரிமை, பெண்கள் பிரதிநிதித்துவம் என பல தளங்களில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தார்.

இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டு கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் காத்தாரின் மீது பொருளாதார தடைகளை விதித்தன.

இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க மன்னருக்கு அறிவுரை வழங்கும் ஷூரா சபையை மக்கள் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை வலுத்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் ஷூரா சபையின் 49-வது ஆண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மன்னர் ஷேக் தமிம் 2021-ம் அக்டோபர் மாதம் ஷூரா சபைக்கான முதல் பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார்.

அதோடு இந்த தேர்தலை வழிநடத்த சிறப்பு தேர்தல் குழு ஒன்றயைும் அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் மன்னர் ஷேக் தமிம் அறிவித்தபடி கத்தாரில் நேற்று முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. 30 உறுப்பினர்களின் பதவிக்கு மொத்தம் 284 பேர் போட்டியினர். இதில் 254 பேர் ஆண்களே. வெறும் 30 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர்.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. நாட்டில் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் கத்தார் மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றதாகவும், அதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Qatrivote-2QatriVote-1Eligible voters trickled in across various polling stations on Saturday to elect 30 members of the 45-seat body [Sorin Furcoi/Al Jazeera]File photo

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி