டிமனோவ்ஸ்கயாவுக்கு போலாந்து மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.கட்டாயப்படுத்தி தாய்நாட்டுக்கு அனுப்புவதாக புகார் கூறிய பெலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலாந்து அரசு, 'மனிதாபிமான விசா' வழங்கியிருக்கிறது.

ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த 24 வயதான கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா, டோக்யோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பயிற்சியாளர்களை விமர்சித்ததால் தன்னை வலுக்கட்டாயமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் புகார் கூறியிருந்தார்.

தனது பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். உணர்ச்சி வயப்படும்நிலை காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெலாரூஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நேற்று பிபிசியிடம் பேசிய அவர், தாம் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். ஆனால் கூடுதல் விவரங்களை தர வேண்டாம் என்று தனக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சதாமிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறிய இராக் ஒலிம்பிக் வீரர்

ரஷ்ய சைபர் தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என்று புதினிடம் கூறிய பைடன்

1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லுகாஷென்கோவால் ஆளப்படும் பெலாரூஸ் மீது, இந்த சம்பவம் மீண்டும் கவனத்தைக் குவியச் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு, அவரது சர்ச்சைக்குரிய மறுதேர்தலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. கிளர்ச்சி செய்த மக்கள் பாதுகாப்புப் படையினரால் ஒடுக்கப்பட்டனர்.

போராட்டம்

பெலாரூஸ் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக போலந்தில் நடந்த போராட்டம் 

அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சிலர் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள். அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது. தேசிய அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிமனோவ்ஸ்கயா டோக்யோவில் உள்ள போலாந்து தூதரக அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரைடாக்ஸ் கூறியுள்ளார்.

"அவரது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர தேவையான அனைத்தையும் போலாந்து செய்யும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டோக்யோவில் இருந்து டிமனனோவ்ஸ்கயா அடைக்கலம் கோரியிருக்கும் அதே வேளையில் அவரது கணவரும் பெலாரூஸ் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கியேவுக்குச் சென்றுள்ள அவர் போலாந்து சென்று டிமனோவ்ஸ்கயாவுடன் சேருவார் என்று பெலாரூஸ் நாட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் போலாந்து அரசு மனிதாபிமான விசா வழங்க முடிவெடித்திருப்பது குறித்து பெலாரஸ் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் போலந்தின் முடிவை வரவேற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரலின் செய்தித் தொடர்பாளரான நபிலா மஸ்ரலி இது குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"டிமானோவ்ஸ்கயாவை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அனுப்ப பெலாரஸ் மேற்கொண்ட முயற்சி லுகாஷென்கோவின் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறையின் கொடூரத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார்.

வீராங்கனை

வீராங்கனை

டோக்யோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் டிமனோவ்ஸ்கயா தற்போது இருக்கிறார்

"நாங்கள் கிரிஸ்டினா டிமனோவ்ஸ்காயாவுக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஆதரவளித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் பாராட்டுகிறோம். அவருக்கு மனிதாபிமான விசா வழங்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் மஸ்ரலி தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை நடந்த 200மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்காக டோக்யோ வந்திருந்தார் டிமனோவ்ஸ்கயா. திடீரென 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், தொடர் ஓட்டத்தில் தன்னுடன் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு போதிய தகுதி இல்லை என்று அவர் சமூக வலைத்தளத்தில் காணொளி மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளியால் பெலாரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அரசுத் தொலைக்காட்சி மூலம் டிமனோவ்ஸ்கயா விமர்சனத்துக்கு உள்ளனார். அவருக்கு "குழு மனப்பாங்கு" இல்லை எனத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.

திடீரென தனது அறைக்கு வந்த பெலாரூஸ் அதிகாரிகள் உடனடியாக உடமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டதாக டிமனோவ்ஸ்கயா கூறினார். இதைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் உதவி கோருவதாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டார்.

"கட்டாயப்படுத்தி என்னை ஜப்பானை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்" என்று பெலாரூஸ்யன் ஸ்போர்ட்ஸ் சோலிடாரிட்டி ஃபவுண்டேஷனின் என்ற டெலிகிராம் குழுவில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் அவர் கூறினார். இந்தக் குழு கடந்த ஆண்டு பெலாரூஸ் அரசை விமர்சிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது.

"பெலாரூஸில் உள்ள தனது குடும்பத்தின் மீது அடக்குமுறை ஏவப்படலாம் என அவர் அஞ்சுகிறார். இதுதான் இப்போது அவருக்கு முக்கியமான கவலை." என்று அந்த டெலிகிராம் குழுவின் உறுப்பினரான அனடோல் கோட்டாவ் பிபிசியிடம் கூறினார்

"அவரது உணர்ச்சி நிலை மற்றும் உளவியல் காரணங்களுக்காக டிமானோவ்ஸ்கயா அணியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று பெலாரூஸ்ய ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று அவருடன் பேசியபோது அவர் மிகவும் கவலையாகத் தெரிந்தார் என்று அணியின் பயிற்சியாளர் யூரி மொய்செவிக் கூறியுள்ளார்.

வீராங்கனை

வீராங்கனை

ஜூலை 30-ஆம் தேதி நடந்த 100மீ தகுதிப் போட்டியில் ஓடிய பெலாரூஸ் நாட்டின் டிமனோவ்ஸ்கயா (இடது)

"நான் அவருடன் அமைதியாக உரையாட முயன்றேன்" என்று கூறிய மொய்செவிக் "பின்னர் அவர் பேசுவதை நிறுத்தி விட்டு பின்னர் மீண்டும் தொடங்குவதைக் கவனித்தேன், அதன் பிறகு தொலைபேசி எடுத்துப் பார்த்தார். ஏதோ நடப்பதாக உணர்ந்தேன்" என்று தெரிவித்தார்.

பெலாரூஸ்ய குழுவுக்கு எதிராக சில ஒழுங்கு நடவடிக்கைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்கெனவே எடுத்திருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் திங்களன்று தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதிபரின் மகன் உட்பட சில அதிகாரிகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்திருந்தது.

பெலாரூஸ் நாட்டின் விளையாட்டு நிர்வாகம் முழுவதும் அதிபர் லுகாஷென்கோவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பிரிவைச் சேர்ந்த ஹீதர் மேக்ஹில் கூறுகிறார்.

"விளையாட்டு வீரர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அரசுக்கு எதிராகப் பேசும் விளையாட்டு வீரர்கள் பழிவாங்கப்படுவதற்கான இலக்காக இருப்பதில் வியப்பில்லை" என்று அவர் கூறினார்.

தன்னார்வக் குழுவின் தலைவர் மர்ம மரணம்

கீவ்

கீவ்

பெலாரூஸில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு உதவும் ஒரு குழுவின் தலைவர் விட்டலி ஷிஷோவ் அண்டை நாடான உக்ரைனில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

காலையில் உடற்பயிற்சிக்காகச் சென்ற அவரது உடல், கியேவ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கொல்லப்பட்டாரா மற்றும் அவரது மரணம் தற்கொலையாக தோன்றியதா என்று விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

"ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி"

லுகஷென்கோ

லுகஷென்கோ

ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் லுகஷென்கோ, ரஷ்ய அதிபர் புடினின் நண்பர்

கிழக்கில் நட்பு நாடான ரஷ்யாவையும் தெற்கில் உக்ரைனையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்திருக்கிறது பெலாரஸ். வடக்கு மற்றும் மேற்கில் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலாந்து உள்ளன.

யுக்ரேனைப் போலவே, 95 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாடு மேற்குலகம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போட்டியில் சிக்கியுள்ளது. அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ "ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி" என்று அழைக்கப்படுபவர். அவர் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் பொருளாதார சீர்திருத்தத்தையும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் லுகாஷென்கோ மோசடி செய்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக அவர் அமோக வெற்றி பெற்றார்.

ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி பெரும் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இதன் பிறகு அடக்குமுறைக்கு அஞ்சி பெலாரஸ் நாட்டில் இருந்து ஏராளமானோர் தப்பிச் செல்கிறார்கள். யுக்ரேன், போலாந்து மற்றும் லிதுவேனியா ஆகியவை அவர்களது இலக்குகளாக இருக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி