இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதனூடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்குத் தடையாக இருந்து அரசைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடிக் கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

உள்ளூரில் போராடி எதனை நாம் பெற்றுக்கொண்டோம் ஆகவே. இலங்கை அரசைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதன் மூலமே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

இத்தனை வருடங்களாக நாம் போராடி வரும் நிலையில் எமக்கான நீதி கிடைப்பதற்கு எவரும் உறுதுணையாக இருந்ததில்லை. அந்த வலியை அனுபவிப்பவர்களால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.

எமது போராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது. எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாகப் போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கோ அரச தரப்பிடம் முற்படுத்துவதற்கோ யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி