தற்போதைய அரசாங்கத்ததைப் போன்றே கடந்த 10 தசாப்தங்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கை காரணமாக தற்போது இலங்கையில் உக்கிரமடைந்து வரும் கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி சம்பந்தமாக தீர்வு காண்பதற்கான வழிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டு மக்கள் விடுதலை முன்னணி, உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு முன்னிலை சோஷலிஸக் கட்சி கடித மூலம் அறிவித்துள்ளது.

மு.சோ.கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரத்னம் அவர்களின் ஒப்பத்துடனான கடிதம், மக்கள் விடுதலை முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தமிழர் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சியின் அதிகார நோக்கங்களுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வுகளுக்காக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட கட்சி, மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றுடன் கலந்துரையாடக் கருதுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி சமீபத்தில் நடந்த ஊடக சந்திப்பின்போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கடிதம் சம்பந்தமாக கம்யூனிஸக் கட்சியினதும், இலங்கை சமசமாஜக் கட்சியினதும் கருத்துக்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் ஏனைய கட்சிகளினதும் பதில் கிடைக்கவிருப்பதாகவும் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறினார்.

கட்சிகளுக்கு அனுப்பிய கடிதம் கீழே காணப்படுகிறது.

பிரதான செயலாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு

செயலாளர் அவர்களே,

தற்போதைய அரசியல் நிலைமைகளின் முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஒரு கலந்துரையாடலை நடத்துதல்:

தற்போது இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பலியாகியுள்ளது. விசேடமாக வெளிநாட்டுச் செலவானியை பெற்றுத் தரும் வழிகள் அனைத்தும் சிதைந்துள்ளதுடன், உழைக்கும் மக்களின் அன்றாட பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. அமைப்புசாரா உழைப்புத் துறையில் பெரும்பாலானவர்களினதும், சம்பள உழைப்பாளிகளினதும், விவசாய – மீன்பிடி ஆகிய துறைகளிலும் வருமானங்களின் உண்மையான மதிப்பு மாத்திரமல்ல, அதன் எண்ணிக்கைசார் மதிப்பும் குறைந்துள்ளது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

இந்த நெருக்கடியின் முன்பாக தொடர்ந்தும் கடன் எடுத்தல், பணம் அச்சிடுதல், மக்கள் சொத்துக்களையும், அரச நிறுவனங்களையும் விற்றல், கல்வி – சுகாதாரச் சேவை உட்பட சமூக பாதுகாப்புச் சேவைகளை வர்த்தகமயமாக்கல், பெரும் பணக்காரர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதோடு, மக்கள் மீது வரி சுமத்துதல் போன்ற செயல்களினால் நெருக்கடி பேரழிவு வரை வளர்ந்து வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியைத் தவிர அரசியல்-சமூக-சுற்றுச்சூழல் போன்றவற்றை அதிகார நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு அமெரிக்கா – சீனா – இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகள், உலக பலவான்கள் மற்றும் பிராந்திய பலவான்கள் முயற்சி செய்வதனால், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பது பரகசியமாகும்.

இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக, சமூகத்தினது ஜனநாயக உரிமைகளை அதிகமதிகமாக வெட்டியும், இனவாதம்- மதவாதம் ஊடாக மக்களின் ஒற்றுமையை பறித்து மோதல்களை உருவாக்கத் தயாராவதையும் காண முடியும். இன்றைய நிலையில் சகல துறைகளையும் இலக்கு வைத்து நீர்த்துவிடப்படும் மிலிட்டரிமயமானது, சமூகம்சாரந்த கடுமையான சவாலாக எமக்கெதிரே நிற்கிறது. தொற்று நோயின் காரணமாக மக்கள் வாழ்வை பாதுகாப்பதற்குப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத அரசாங்கம், தனிமைப்படுத்தல் சட்டத்தை இப்;போது பயன்படுத்துவது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்குத்தான் என்பது சமீபகால சகல உதாரணங்களும் உறுதி செய்கின்றன.

இந்த நிலைiமை சம்பந்தமாகவும், அதனை எதிர்கொள்வது சம்பந்தமாகவும் நமக்கிடையே கலந்துரையாடலொன்று நடைபெற வேண்டுமென நம்புகிறோம். அந்த கலந்துரையாடலுக்கு திகதியையும், நேரத்தையும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

குமார் குணரத்னம்

பிரதான செயலாளர்

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2021 ஜூலை 21

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி