இலங்கையின் மீன் வளம் அழிவடைதற்கு  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த வெளியேறிய இரசாயன கசிவு காரணமல்ல எனவும், மாறாக நாடு முழுவதும் உள்ள கடலுக்கு அரசாங்கத்தால் திருப்பி விடப்பட்ட கழிவுநீர் அமைப்பே காரணமாக அமைந்துள்ளதாகவும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

களனி ஆறு, தடுகம் ஓயா, மற்றும் முத்துராஜவல பிரதேசத்தில் கடலில் திருப்பி விடப்படும் கழிவு நீர் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து கழிவுநீர் அமைப்புகளும் கடலில் கலப்பதால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாக, அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க அமைப்பின் தலைவர் அருண ரொசாந்த தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் பேர்ள் கடந்த ஜூன் மாதம்  கொழும்பு கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் தீக்கிரையானது.

இந்நிலையில் அன்றைய தினம், நீர்கொழும்பு பிரஜைகள் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் என அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் அமிலங்கள், இரசாயனங்கள் மற்றும் தீக்கிரையான பொருட்களின் பகுதிகள் கடலில் கலந்துள்ளமையால், விபரிக்க முடியாத சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

"ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து இரசாயன பொருள் கடலுக்குள் கலந்திருந்தால்,  உயிரிழந்த ஆயிரக்கணக்கான மீன்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் கரையொதுங்கியிருக்க வேண்டும்” என அருண ரொசாந்த கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"ஆமைகள் பெரும்பாலும் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. கடல் கொந்தளிப்பு காலத்திலும் ஆமைகள் கரையொதுங்கும். அவ்வாறு இல்லாமல், இராசாயனங்களால் ஆமைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் கருத்தினை ஒரு மீனவனாக நான் நம்பவில்லை. பேர்ள் கப்பலை விட அரசாங்கம் கடலில் அதிக இரசாயனங்கள் கலக்கச் செய்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மீனவர்களை விட அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நாட்டிலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சிறு மீனவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் மீனவர் சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"ஒவ்வொரு அரசாங்க திட்டத்திலும் சிறிய அளவிலான மீனவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கப்பல் தீப்பிடித்த காரணத்தினால் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்போதும் சிறிய அளவிலான மீனவர்களுக்கு அநியாயம் இடம்பெற்றது.  இழப்பீடாக அரசாங்கம் கோரிய 40 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளன. சிறு மீனவர்களுக்கு ஒரு நாளுக்கு 1,750 ரூபாய் இழுவை படகு மீனவர்களுக்கு ஒரு நாளுக்கு 2,000 ரூபாய்  என  இழப்பீடு முன்மொழியப்பட்டுள்ளது. பெரிய படகுகள் உள்ளவர்களுக்கு ஒரு நாளுக்கு 8,000 ரூபாய்

மிகப்பெரிய வலை மீனவர்களுக்கு ஒரு நாளுக்கு 6,000 ரூபாய் எனவும், பத்து நாட்களுக்கு இது வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது”

அரசாங்கம் மற்றும் பேராயரின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்களால் இழப்பீடு வழங்கப்படுவதால், சிறு மீனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் கர்தினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்படை தடை

கப்பல் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 16 கிலோமீற்றர் சுற்றளவு பிரதேசம்,  நீர்கொழும்பில் இருந்து கொச்சிக்கடை வரை 6 கிலோமீற்றர் தூரம் மற்றும் பாணந்துறை வரை 2 கிலோமீற்றர் தூரம் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அது இன்னமும் நடைமுறையில் உள்ள நிலையில், பல சந்தர்பங்களில் ”கடற்படை சில இடங்களில் மீனவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்கிறது” என மீனவர் சங்கத் தலைவர் அருண ரொசாந்த தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி