சர்வதேச நாடுகளை வளைத்துப் போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களைச் சந்தித்துக் கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது என்று கூறியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை அரசாங்கம் தனது,  "போலி தேசியவாத" கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜேர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசரமாகச் சந்தித்து, எமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்றும் அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார்.

அவரது கருத்து சரியென்றபோதும், இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்குத் தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளைக் காப்பாற்றுகின்றதா என்பதை நிதியமைச்சர்  பெசில் சந்தித்த  தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும்.

அதைவிடுத்து விட்டு, தங்கள் சொந்த நலன்களுக்காக, தமிழ் பேசும் மக்களின் தோள்களில் சவாரி ஓட இனியும் முயலக் கூடாது. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களைத் தள்ளி விட வேண்டாம்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்”  என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம்.

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவும், ஜனாதிபதியும் பிரதமரும் தொட்டதுக்கு எல்லாம் போலி தேசியவாதம் பேசி, நாடு பறி போகிறது என்று கூறி, சிங்கள இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டையும் இழுத்து விடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களின் மனங்களை வெல்ல முயன்றால் இலங்கை நாட்டை நோக்கி  முதலீடுகள் குவியும்.

மேற்குறிப்பிட்ட தூதுவர்களுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இந்த செய்தியின் மொழிபெயர்ப்பு இவர்கள் கவனத்துக்கு போகும் என எனக்கு தெரியும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களை இந்த அரசாங்கம் நியாயமாக நடத்துகிறதா என தேடி பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்யச் சொல்லுங்கள். உங்கள் சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை இனியும் பயன்படுத்த முயல வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி