பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸைத் தவிர பல்வேறு தடுப்பு மையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிட நீதிபதிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்றும் திட்டத்தை நீதி அமைச்சர் கைவிட்டுள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உண்மையான அக்கறை இல்லாத அரசாங்கம், ஐரோப்பிய வரிவிலக்குகளை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு “சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் மோசடியில்” ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கண்காணிக்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல அதிகாரம் வழங்குவதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு, பொலிஸ் குற்றப்பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பிற தடுப்பு மையங்களை ஆய்வு செய்ய நீதவான்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்மொழிந்தார்.

எனினும், ஆளும் கட்சியில் விவாதித்த பின்னர் இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்களா என்பதை ஆராய நீதவான்கள், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும்  மாதத்திற்கு ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகள் காவல் நிலையங்களில் மாத்திரம் தடுத்து வைக்கப்படுவதில்லை என முஜிபுர் ரஹ்மான்  சுட்டிக்காட்டினார்.

fghfghjkj

"பொலிஸ் நிலையங்களில் சாதாரண சந்தேகநபர்கள் நீண்ட தடுத்து வைக்கப்படுவதில்லை. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்படுகின்றனர்.  அவர்களில் பெரும்பாலோர் பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு அல்லது பொலிஸ் குற்றப்பிரிவில் உள்ளனர்.”

இரண்டு வருடங்களுக்கு முன்னர்  இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) ஆகியவை இலங்கை அரசாங்க பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இடங்களின் வரைபடத்தை வெளியிட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை சித்திரவதை செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் நீண்டகாலமாக தடுத்து வைத்தல் ஆகியவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தன.

சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச தினமான ஜூன் 26ஆம் திகதி  உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் வெளியிட்ட அறிக்கையில்,  கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் இலங்கை பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து, தற்போது பிரித்தானியாவில் உள்ள 10 தமிழர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறியது.

பயங்கரவாத தடுப்பு பொலிஸைத் தவிர, இராணுவமும் குற்றவாளிகள் பட்டியியலில் உள்ளடங்குவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து மனித உரிமைகளை நிலைநிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது, இல்லையெனில் இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டங்களை திருத்துவதாக, சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு அரசாங்கம் ஏமாற்று வேலையை செய்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கம் இதைச் செய்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இல்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி