உயிர்த்த ஞாயிறுதின திட்டத்தைத் வகுத்த பிரதான சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னாலுள்ள முக்கிய சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. தாக்குதல்களுக்கான திட்டத்தைத் வகுத்த பிரதான சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஏற்படுத்தப்படக்கூடிய அழுத்தங்களிலிருந்து தப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனை சிறையில் அடைத்திருக்கின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரம் தொடர்பில் அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படும் கொள்கையானது அண்மைக்காலத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது. அதாவது உர இறக்குமதியை நிறுத்துவதாகவும் அதற்குப்பதிலாக எமது நாட்டிலேயே சேதன உரத்தை உற்பத்திசெய்யப்போவதாகவும் அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இப்போது உரத்திற்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இருப்பினும் கடந்த திங்கட்கிழமை பெருமளவு மெட்ரிக்தொன் உரம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிலுள்ள சாதாரண விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் அவசியமான உரத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், துறைமுகத்தை வந்தடைந்திருக்கும் உரம் யாருக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது? அரசாங்கம் அதன் கொள்கைகளின் பிரகாரம் பல்வேறு பொருட்களினதும் இறக்குமதியை இடைநிறுத்தியிருப்பதாகக் கூறுகின்றது. ஆனால் அதே பொருட்களை இரகசியமான முறையில் இறக்குமதிசெய்து நாட்டிற்குள் கொண்டுவருகின்றது. எனவே அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு அவசியமான உரத்தைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் உர மாஃபியாவை முன்னெடுத்துச்செல்லல் ஆகிய நோக்கங்களுக்கான இரகசியமாக உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சேதன உரம் தொடர்பான பொறுப்பு அண்மையில் ஷசீந்திர ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சிற்குக்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இன்றளவில் உரம் தொடர்பான பிரச்சினைக்குப் பதிலளிக்கவேண்டியவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்ததாக அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்சக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக்கூறும் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அவை நடைமுறையில் இருக்கின்றதா என்று கேள்வி விரும்புகின்றோம். இந்த நிர்ணயவிலைகளிலிருந்து விடுபடுவதற்காக மொத்த வியாபாரிகள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். அதன் விளைவாக சில்லறை வியாபாரிகளும் நுகர்வோரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இதனைச் சீரமைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 'பொம்மை' என்று வர்ணித்தவர்கள் இப்போது டட்லி சிறிசேனவின் முன்பு 'பொம்மையாகி' இருக்கின்றார்கள். நாட்டின் மொத்த அரிசி வியாபாரிகளில் முக்கியமான பலர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனேயே இருக்கின்றார்கள். ஆகவே வெகுவிரைவில் ஏற்படப்போகும் உரப்பற்றாக்குறைக்கு அரசாங்கம் எத்தகைய தீர்வை வழங்கப்போகின்றது என்பது குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும்.

மறுபுறம் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. அதுமாத்திரமன்றி இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய ஒலிப்பதிவுகளும் ஆவணங்களும் அழிந்திருக்கின்றன அல்லது காணாமல்போயிருக்கின்றன.

ஆகவே சர்ச்சைக்குரிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை அரசாங்கம் திட்டமிட்டு மூடிமறைப்பதற்கு முற்படுகின்றமை இவற்றின்மூலம் தெளிவாகின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் எமது நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடுசெய்து பார்க்கும்போது பெருமளவான நஷ்டஈட்டைப் பெறமுடியும். ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தையும் முழுமையாக அதன் தனிப்பட்ட நலன்களுக்காக மாத்திரமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் நேற்று மீண்டும் முக்கியமானதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இந்தத் தாக்குதல்களின் பின்னாலிருக்கும் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கான நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று நாம் கடந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம்.

இந்தத் தாக்குதல்களுடன் சிறியளவில் மாத்திரம் தொடர்புபட்டவர்களை சட்டத்தின்முன்நிறுத்திவிட்டு, இதற்கான திட்டத்தைத் தீட்டிய பிரதான சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதனுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுக் கைதுசெய்யப்பட்டிருக்கும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எவையும் இல்லை என்பதுடன் அவரை முடக்குவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதன்காரணமாக இவ்வழக்கிலிருந்து நீதிபதிகள் பலர் விலகிவிட்டார்கள். கர்தினாலிடம் இருந்து தப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனை சிறையில் அடைத்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி