ஒரு காலத்தில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் வசிப்பிடமாக இருந்த பகைச்சாவின் அதே அறையில் தற்போது அவரது வழக்கறிஞர் பீட்டர் மார்ட்டின் இருக்கிறார். இது பகைச்சாவின் (ஸ்டேன் சுவாமியின் அலுவலகம்) முதல் மாடியில் உள்ளது.

இந்த இரண்டு மாடி கட்டடத்தின் வெளிப்புற சுவரில் சிவப்பு மற்றும் உள்ளே வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இது ஸ்டேன் சுவாமியின் அலுவலகமாகவும், வீடாகவும் இருந்தது.

இங்கிருந்து பணிபுரியும் போதுதான் அவர் நாட்டின் பிரபல மனித உரிமை செயல்பாட்டாளராக அங்கீகரிக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடினார். இங்கு வசிக்கும் போதுதான், அவர் சுமார் ஆறு டஜன் புத்தகங்களையும் குறிப்புகளையும் எழுதினார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அவரை கைது செய்யும் வரை அவர் இங்கு தங்கியிருந்தார். இப்போது அவருடன் தொடர்புடைய நினைவுகள் மட்டுமே இங்கு உள்ளன.

84 வயதான ஸ்டேன் சுவாமி, பீமா கோரேகாவ் வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்தார். அவர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

"பாதிரியார் ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்கான உரத்த குரலாக இருந்தார், அவர் மக்களின் கோபத்திற்கு குரல் வடிவும் கொடுத்தார். சமூகத்தில் எங்கு மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் அங்கு அவரது குரல் ஓங்கி ஒலித்தது. அவர் ஒருபோதும் யாருக்கும் பயப்படவில்லை. அவர் இருந்தவரை, அவரது குரல் ஒருபோதும் தடுமாறவில்லை. வரவிருக்கும் காலங்களில் மக்கள் அவரை அப்படித்தான் நினைவில் கொள்வார்கள். அவர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தை யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

" கொள்கை வேறுபாடுகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் மற்றும் அவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 2017 ஆம் ஆண்டில் அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். இப்போது அவர் அரசுடன் போராடி ஒரு கைதியாகவே இறந்தார். அது வருந்தத்தக்கது."என்று பீட்டர் மார்ட்டின் மேலும் கூறினார்.

ஜார்கண்ட்

ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்த செய்தி பரவியதும், ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி உள்ளிட்ட பல நகரங்களிலும் ,சமூக சேவையாளர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். ராஞ்சி மற்றும் பகோதரில், பிரதமர் நரேந்திர மோதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. ஸ்டேன் சுவாமியின் மரணம் இயற்கையானது என்று எடுத்துக் கொள்ள முடியாது , இது ஒரு திட்டமிட்ட கொலை போன்றது என்று ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தந்தை ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு மோதியின் மத்திய அரசும், அவரது நிறுவனமான என்ஐஏவும் தான் காரணம் என்று ஸ்டேன் சுவாமியின் அமைப்பான பாகைய்சாவின் தற்போதைய இயக்குநர் பி.எம் டோனி பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்டேன் சுவாமிக்கு சரியான நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால், அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

"பீமா-கோரேகாவ் வழக்கு முழுமையாக ஜோடிக்கப்பட்ட ஒன்று. ஸ்டேன் சுவாமிக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. எனவே அவர் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், அந்த வழக்கு திரும்பத்திரும்ப ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 3 ஆம் தேதியும், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அது அவர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். இறுதியில் அவர் காலமானார்," என்று அவர் மேலும் கூறினார்.

"ஸ்டேன் சுவாமி எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தார். பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் போராடினார். அவர்களை விழிப்புணர்வு பெறச்செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை ஒழுங்கமைத்தார். மேம்பாடு என்ற பெயரில் பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகளை அரசுகள் எவ்வாறு நசுக்குகின்றன என்பதை அவர்களுக்கு விளக்கினார். பழங்குடியினர் தங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளும்போது, அவர்கள் தங்கள் சொந்தப் போர்களை தாங்களே போரிட முடியும் என்று அவர் நம்பினார். ஆகவே, பழங்குடியினர் தங்கள் இயக்கங்களை தாங்களே வடிவமைப்பதையும் அவர் அனுமதித்தார். பழங்குடியினர் போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார்,"என்று பி.எம்.டோனி சுட்டிக்காட்டினார்.

ஜார்கண்ட்

ஜார்க்கண்ட் மக்கள்உரிமை சபையுடன் தொடர்புடைய பிரபல சமூக சேவகர் சிராஜ் தத்தா, ஸ்டேன் சுவாமிக்கு நெருக்கமானவர்.

" ஸ்டான் சுவாமிக்கு இப்படித்தான் நடக்கும் என்ற சந்தேகம் இருந்தது. அவர் கைது செய்யப்பட்டு இதுவரையிலான 10 மாதங்களும், கோபமும் விரக்தியும் நிறைந்தவையாக இருந்தன. ஆனாலும் அவர் திரும்பி வருவார் என்று நான் நம்பினேன். அரசால் அவரை தகர்க்க முடியவில்லை. எனவே அவரைக்கொன்று விட்டது. இது, சமத்துவம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தாது. இந்த ஃபாசிச அரசுக்கு எதிராக ஸ்டேன் சுவாமி தொடங்கிய போராட்டம் எதிர்காலத்திலும் தொடரும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், "ஸ்டேன் சுவாமியின் மரணத்தை இயற்கையான மரணம் என்று நாங்கள் கருதவில்லை. மோதி அரசு மற்றும் இந்திய நீதி அமைப்பின் கொடுமைக்கு அவர் பலியானார் என்ற வலுவான எண்ணம் எங்களுக்கு உள்ளது. ஸ்டேன் சுவாமியின் கர்மபூமியாக இருந்த ராஞ்சிக்கு அவரது பூதவுடலைக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜார்கண்ட் அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்."என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அலோக் குஜூர் இந்த தகவலை வழங்கினார். சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல பிரபல அறிவுஜீவிகள், ஸ்டேனின் கூட்டாளிகளாக இருந்த ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் என்று அவர் கூறினார்.

ஜார்கண்ட்

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான ஜீன் ட்ரெஸுக்கும், ஸ்டேன் சுவாமிக்கும் இடையே நீண்டகால உறவு இருந்தது. இருவரும் பல இயக்கங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். ஸ்டேனின் மரணம் தனது வாழ்க்கையில் நடந்த மிக சோகமான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அவர் கூறினார். .

"பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான நபரின் ஜாமீனை எதிர்த்ததற்காக என்ஐஏவை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவர் ஒரு அற்புதமான ஆளுமை கொண்ட பொறுப்புள்ள குடிமகன். அவர் ஒரு மாவோயிஸ்டு என்று நான் நம்பவில்லை. அப்படியே இருந்தாலும்கூட, ஜாமீன் மற்றும் சிகிச்சை பெற அவருக்கு உரிமை இருந்தது," என்று ஜீன் ட்ரெஸ் கூறினார்.

"உண்மையில், யுஏபிஏ(சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்) தொடர்பான வழக்குகளில் விசாரணைகைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. அதன் தண்டனை விகிதம் 2 சதவீதம் மட்டுமே. ஸ்டேன் சுவாமியும் யுஏபிஏவின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகளாக மக்களை விசாரணை கைதிகளாக வைத்திருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பது பற்றிய விவாதம் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் புலனாய்வு அமைப்புகளால் எந்த ஆதாரத்தையும் அளிக்க முடிவதில்லை. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். "என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி