முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று காலை, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 2017ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது, இன்று 1,580ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் சுகாதார நடைமுறைகளைப் பேணி, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை, உறவுகள் முன்னெடுத்தனர் 'எங்கள் உறவுகளை எங்கே மறைத்து வைத்தாய்?', 'நட்டஈடும் வேண்டாம்: மரணச்சான்றிதலும் வேண்டாம்', 'வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?', 'பாடசாலை மாணவரும் தமிழரின் பிள்ளைகளும் பயங்கரவாதிகளா?' என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும், 'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்', 'எங்கே எங்கே உறவுகள் எங்கே', 'சர்வதேசமே பதில் கூறு' ஆகிய கோஷங்களை எழுப்பியவாறும், கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எத்தடை வரினும், தமது உறவுகள் தமக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், தமக்கான நீதியைப் பெற்றுத்தர அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதேவேளை, குறித்த போராட்டத்தில் அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து, போராட்டக்காரர்களை வீடியோ, புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி