முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை வர்த்தகர்களுக்கு வழங்கும் விடயத்தை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தேசிய தொழில் நிபுணர்கள் ஒன்றியத்தின் செயலாளர் பொறியியலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளதோடு, பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 19 நபர்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

செலென்திவ முதலீட்டு திட்டத்தைப் பயன்படுத்தி தனியார் தொழில்முனைவோருக்கு அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை மாற்றுவது அல்லது குத்தகைக்கு விடுவதைத் தடுக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடுமாறு, ஜூன் 30ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை அனைத்து இலங்கை குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதால், நிறுவனத்தை முழுமையான மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

செலென்திவ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட மூன்று நிறுவனங்களின் கீழ் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள தொல்பொருள் மற்றும் வணிக மதிப்புள்ள காணிகள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி அமைச்சரவையின் ஒப்புதலுடன் திறைசேரியின் 100 வீத உரிமையுடன் செலென்திவ முதலீட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கு, மே 17ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

”செலென்திவ முதலீட்டு கம்பனி அரசாங்கத்திற்குச் சொந்தமானதென அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளுக்காக வசதியளிப்பதற்காக அரச – தனியார் பங்குடமையின் அடிப்படையில் முதலீட்டு வசதியளித்தல்கள் வழங்கும் கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் கொழும்பு கோட்டை செலென்திவ முதலீட்டு நிறுவனம், நிலையான சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் இராசரட்டைக்குரிய ஹோட்டல் பிரிவு என மூன்று கொத்துக்கள் நடைமுறைப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது.” (மே 17ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய விடயம்.)

42 ஏக்கர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான கென்வின் ஹோல்டிங்க்ஸ் தனியார் கம்பனி, ஹோட்டல் டிவலொபேர்ஸ் (லங்கா) கம்பனி மற்றும் ஹோட்டல் கொழும்பு கம்பனி போன்ற கம்பனிகள் தற்போது செலென்திவ முதலீட்டுக் கம்பனியின் கீழ் கொண்டுவரபட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைச்சு அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் ஹோட்டல் டிவலொபேர்ஸ் (லங்கா) காணப்படுகிறது.

"வெளிநாட்டு அல்லது உள்ளூர் ஆலோசகர்கள் அல்லது வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனங்களின் சேவைகளை அரசாங்க கொள்முதலை மீறி அவர்களின் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் அல்லது மேம்படுத்தவும்  செலென்திவ முதலீட்டு நிறுவனத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என தேசிய தொழில் நிபுணர்கள் ஒன்றியத்தின் செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனங்களில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டல், மக்கள் வங்கி, யோர்க் வீதி கட்டிடம், கஃபூர் கட்டிடம், வெளிவிவகார அமைச்சு கட்டிடம், பொது தபால் அலுவலகம், டி.சி. ஆர். விஜேவர்தன மாவத்தை சீனோர் உணவகம், வோட்டர்ஸ் எட்ஜ் கலப்பு அபிவிருத்தித் திட்டம், கொழும்பு ஹில்டன் ஹோட்டல் மற்றும் விளையாட்டு வளாகம், கிராண்ட் ஹயாட் ஹோட்டல் திட்டம் ஆகியவற்றை, முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முன்னதாக எச்சரித்திருந்தது.

இந்த கட்டடங்களில் பெரும்பாலானவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

ஓகஸ்ட் 1, 1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட யோர்க் வீதி கட்டிடம், 30 வருடத்திற்கு மேல், இலங்கை வங்கியின் தலைமை அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடம் என, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த கட்டிடம் இலங்கை வங்கிக்கு சொந்தமானது என்றாலும், இதன் தொல்பொருள் மதிப்பிற்கு அமைய, "முழு தேசத்தின் பெருமையின் அடையாளமாக" இது காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை ஏனைய தரப்பிற்கு மாற்றுவதில் 51% அரச உரிமையை இழந்தமைக்கு, கணக்காய்வாளர் நாயகம் பொறுப்பேற்க மாட்டார் என, தேசிய தொழில் நிபுணர்கள் ஒன்றியத்தின் செயலாளர் பொறியியலாளர் ரேணுகா பெரேரா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் சொத்து மீதான பொறுப்பை இழக்கும் எனவும், இது நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சின் செயலாளர், கணக்காய்வாளர் நாயகம், செலென்திவ முதலீட்டு நிறுவனம், செலென்திவ ”லேசர்” பதிவாளர் நாயகம், கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, அமைச்சரவை செயலாளர், இலங்கை காப்புறுதி நிறுவனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

செலென்திவ நிறுவனத்தை பயன்படுத்தி தலைநகரின் வரலாற்று கட்டிடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் 'வதந்திகள்' என குறிப்பிட்டு மறுத்துள்ளது.

ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்திற்கு ஏற்ப, நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதே செலென்திவ நிறுவனத்தின் நோக்கம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பாழடைந்த வரலாற்று கட்டிடங்களை அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் புதுப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.பி யாலேகம தெரிவித்திருந்தார்.

முதலீட்டுத் திட்டம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்படும் என செலென்திவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷமாஹில் மொஹிதீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி