பின்வாசலால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், போதுமான கருத்தாடலின்றி கொண்டுவரப்படும் ‘கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலும்” போன்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் காரணிகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் கீழ் தற்போது நிலவும் கல்வியை பணத்திற்கு விற்கும் முறை மற்றும் உயர் கல்வியை இராணுவ மாதிரியாக மாற்றும் முயற்சி சம்பந்தமாக கருத்து தெரிவித்த பேராதெனிய பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் ஷாமிலா குமார், பல விடயங்கள் காரணமாக அரசாங்கம் கொண்டு வரும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் சம்பந்தமாக தனது அதிருப்தியை வெளியிடுவதாகக் கூறினார். விசேடமாக உயர் கல்வி வரை எமது நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்விக் கொள்கையை ஆபத்தில் தள்ளும் திருத்தங்களை அனுமதிக்க முடியாதெனக் கூறும் அவர், குறைபாடுகளைக் கொண்ட தற்போதைய கல்வி முறையை மாற்றுவதாயின் முறையான சமூக கருத்தாடலொன்று தேவை எனவும் வலியுறுத்துகிறார். இராணுவ முறையின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களை நடாத்திச் செல்வதும், அதை சட்டபூர்வமாக்குவதற்குமான சட்டங்களை கொண்டுவருவதும் ஆபத்தானதெனவும் அவர் வலியுறுத்துகிறார்.

பேராதெனிய பல்கலைக் கழகத்தின் விவசாயப் பொருளாதார மற்றும் வர்த்தக பீடத்தின் பேராசிரியர் விரிவுரையாளர் ஷாமிலா குமார் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் கீழ்கண்டவாறு கூறினார்.

‘ KDU சட்டமூலம் சம்பந்தமாக கவலைப்பட பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, தற்போதைய எமது கல்விக் கொள்கையானது கல்வி உரிமையை இலவசமாகப் பெறக் கூடிய அடிப்படையைக் கொண்டுள்ளது. கல்வி சம்பந்தமாக சமூகக் கோரிக்கைகள் பலவற்றிற்கு மத்தியில் தேசிய கல்விக் கொள்கையொன்றை நிர்மாணிப்பது எப்படி என்பது குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்திய பின்னர்தான் தற்போதைய கல்விக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. இது ஒரு வகையில் மக்கள் அங்கீகாரத்துடனான கல்விக் கொள்கையாக தற்போது நடைமுறையில் உள்ளது. ஆகவே, அதை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், இந்த இலவச கல்விக் கொள்கைகள் தயாரிக்கப்பட்டதன் நோக்கத்திற்கு ஏற்றவாறு கல்வி வாய்ப்புகள் தற்போது விரிவாக்கப்படுவதில்லை.

இந்த முறையில் பல குறைபாடுகள் உள்ளன. என்றாலும், கல்வியை பணத்திற்கு வழங்குவதற்கான முயற்சி நடைபெறுகிறது. தற்போதைய வரம்புகள் குறித்து சரியான கருத்தாடல் இல்லாதிருந்தமையால் பல விமர்சனங்கள் இருந்தன. கல்வி மறுசீரமைப்பு என்ற வகையில் ஒவ்வொரு முறையும் கொண்டு வந்த மாற்றங்கள் காரணமாக இலவசக் கல்விக் கொள்கையின் நோக்கம் மீறப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டபோது சரியான சமூக கருத்தாடல் இல்லாமல் பின்கதவால் முன்மொழிவுகளை நிறைவேற்ற முயத்தமையினால் எதிர்ப்புகள் கிளம்பின. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் பார்க்கும் போது, எந்தவொரு கருத்தாடலுமின்றி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

இரண்டாவதாக, கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், KDU என்ற விசேட நிறுவத்தின் இராணுவ இயல்பு. பல அரச நிறுவனங்களின் முதன்மை பொறுப்புடமை ஏற்கனவே இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். பல்கலைக் கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் சிவில் நிர்வாக அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படல் வேண்டும். பல்கலைக் கழகம் என்பது உயர் கல்விக்கான ஒரு இடம். அறிவை முதன்மையாகக் கொள்வது மாத்திரமல்ல, சுதந்திரமான சிந்தனை உரையாடல்கள், விமர்சன ரீதியிலான பகுப்பாய்வுகள் மற்றும் கல்விப் பணிகளை விரிவாக்கும் நோக்கத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகம் என்பது அடிப்படையில் இராணுவ அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம். இரண்டு சிவில் அதிகாரிகள் உத்தியோக ரீதியில் நியமிக்கப்படுவார்களேயன்றி, முற்றிலும் யுத்த தேவைகளுக்கான நிறுவன முறையொன்று இங்கு நிலவுகிறது.

பல்கலைக் கழகம் என்ற ஒரு இடத்தில் அத்தகையவர்களின் கடமைப் பொறுப்பு என்ன என்பதில் பிரச்சினை உண்டு. ஏனெனில், இந்த கொத்தலாவல பல்கலைக் கழகத்தில் தற்போது படைத்துறை சம்பந்தமான கற்கைக்கு, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்காக இரண்டு பிரிவுகள் மாத்திரமே உள்ளன. தவிரவும், ஏனைய பல்கலைக் கழகங்களில் உள்ள சகல பாடங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதே போன்று, படையினர்கள் என்ற வகையில் இலவசக் கல்வியை பெற்றுக் கொள்ளவும் முடியும். அவர்களுக்கு சம்பளமும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் வெளிப்புற சமூகத்தில் மாணவர்கள் கற்பதற்கு அதிக பணம் செலுத்த நேரிடும். இத்தகைய நிலையில், பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்வதிலிருந்து பாரபட்சம் காட்டப்படும். இலவச கல்வியைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் இது மிகவும் மோசமான நிலையாகும்.

இதை ஒரு பல்கலைக் கழகம் எனக் கூறினாலும் இங்கு மாணவர் கையேட்டை பார்க்கும் போது சாதாரண ஒரு பாடசாலையை அல்லது யுத்த முகாமொன்றை போலவே உள்ளது. காலையில் எழுவதிலிருந்து நாளாந்த இருப்பு, கல்வி நடவடிக்கைகள் மாத்திரமல்ல, கல்வி நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடும் பின்னணியும் இங்கு கிடையாது. இராணுவ வீரர்கள் ஆடை அணிவதிலிருந்து, உயரதிகாரிகள் வரும் போது எழுந்து நிற்றல், அமைதியாக இருத்தல், கட்டளைகள் பின்பற்றல் போன்ற பல கட்டுப்பாடுகள். சுதந்திரமாக நடமாட உரிமையில்லாத, கருத்தாடல், திறனாய்வு, சுதந்திரமான இருப்பு இல்லாத இடத்தில் ஒரு பல்கலைக் கழகத்தின் பங்கு நிறைவேற்றப்பட மாட்டாது. இது பொதுவாக பாடசாலையொன்றின் முறையாகக் கூட இல்லை.

எங்களுக்குத் தெரிந்த வரையில் இராணுவம் வரும்போது தனிநபர் சுதந்திரம் ஒழிக்கப்படும். மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு கீழ்படியும் ஒரு இடத்தில் ஜனநாயகம் கிடையாது. விமர்சனத்துடனான சிந்தனை கிடையாது. சுதந்திரமான சிந்தனைக்கு இடமில்லை. உண்மையிலேயே, ஒரு பல்கலைக் கழகம் இப்படி இருக்க முடியாதல்லவா. ஆனால், KDU சட்டமூலம் சட்டமாக்கப்படுவதனால் உயர்கல்விக்கு படைத்துறை வழியொன்று நிறுவப்படுகிறது. கல்வியில் இராணுவ முறையை நுழைவிப்பது என்பது மிக பயங்கர நிலைமையாகும். படித்த சமூகம் என்பது விமர்சன சிந்தனை, சுதந்திரமான கருத்தாடல் மற்றும் தெரிவு செய்யும் சுதந்திரம் போன்றவற்றை பாதுகாக்கும் இடமாக இருக்க வேண்டும்.

இராணுவத்தில் நீங்கள் வேறு கருத்துக்களையோ, எவ்வித மாற்றுத் தெரிவையோ கொண்டிருக்க முடியாது. தர்க்கிக்க முடியாத கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். அதைப் போன்ற ஒன்று இராணுவ முன்னணிக்கு பொருந்துமேயன்றி, பொது சமூகத்திற்கு பொருந்தாது. எமது கல்வியின் ஊடாக படைவீரர்களைப் போன்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதாயின் அங்கே ஜனநாயகம் கிடையாது. அதனூடாக ஆட்சியாளர்களுக்குத் தேவையானவாறு நாட்டை நடாத்திச் செல்ல முடியும். ஆனால், மனித சுதந்திரம், ஜனநாயகம் இல்லாத சமூகமொன்று உருவாகும். எனவே, தற்போதைய கல்விக் கொள்கையை மறுசீரமைக்கும் போது முன்னுரிமைகள் எவை என்ற விடயம் குறித்து கவனம் செலுத்துவதாயின் எமது கல்விக் கொள்கையின் அடிப்படையை கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் மாத்திரமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பொது மக்கள் மத்தியிலும் கல்வி சம்பந்தமான கருத்துக்களை பரிமாறக் கூடிய கருத்தாடல்கள் நடைபெற வேண்டும்.

இங்கு நான் கவனித்த இன்னொரு விடயம்தான், எமது கல்வி வாய்ப்புகள் சம்பந்தமாகவும், கல்வி வாய்ப்புகளை நிறைவேற்றுவதற்கான வரையறைகளும். இலவச கல்வியெனக் கூறப்பட்டாலும், காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளினால் கல்வி உரிமை மறுக்கப்படும் நிலைமை உண்டு. ஆனால், KDU என்பது, கல்விக்காக பணம் செலுத்த வேண்டிய ஒரு இடம். ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள விசேட சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பணம் செலுத்தக் கூடியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிறுவன வலைத்தளங்கள் உருவாகக் கூடும். கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக நமது சமூகத்தின் கோரிக்கையை பூர்த்தி செய்ய தற்போதைய கல்வி முறை தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் KDU நிறுவனத்தின் கிளைகளை அமைக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது”.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி